Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கான வரிகளை உடனே செலுத்த அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 16.09.2010

மாநகராட்சிக்கான வரிகளை உடனே செலுத்த அறிவுறுத்தல்

திருச்சி, செப். 15: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வரியில்லா இனங்கள் நிலுவை மற்றும் நடப்பு கேட்புத் தொகைகளை இந்த மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த பொதுமக்களுக்கு ஆணையர் த.தி. பால்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்புக் கட்டடங்கள், வணிக உபயோகக் கட்டடங்கள், தொழில்சாலைக் கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டு 1994-ம் ஆண்டின் திருச்சி மாநகராட்சி சட்டம் 2-வது அட்டவணையில் பகுதி 4-ன்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்குள்பட்டு ஒவ்வொரு அரையாண்டு ஆரம்பித்த 15 நாள்களுக்குள் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், புதை வடிகால் சேவைக் கட்டணம் ஆகிய இனங்களுக்கான கேட்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.

அதாவது, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள்ளும், அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். அதன்படி, 2010-2011 ஆம் ஆண்டு ஏப். 1-ம் தேதி முதல் ஆரம்பமான முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையிலும், அரையாண்டுக்கான காலம் முடிவடைய இன்னும் 15 நாள்களே உள்ள நிலையிலும், இதுவரை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்கள் அதிக நிலுவையில் உள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக 2010-2011 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான கேட்பு எழுப்பப்பட்டுள்ளதால், வரி விதிப்பாளர்கள் இரண்டு அரையாண்டுகளுக்கும் சேர்த்து வரியினங்களை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டட உரிமையாளர்கள், வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், தொழில்சாலைக் கட்டட உரிமையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் போன்ற வரியினங்களை மாநகராட்சி மைய அலுவலகம், 4 கோட்ட அலுவலகங்கள், மாநகராட்சி சேவை மையங்கள், நடமாடும் கணினி வரி வசூல் மையம் ஆகிய இடங்களில் நிலுவையின்றி செப். 30-க்குள் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.