Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் டெபாசிட் வசூலில் கெடுபிடி;கம்பத்தில் பொதுமக்கள் அதிருப்தி

Print PDF

தினமலர் 27.09.2010

குடிநீர் டெபாசிட் வசூலில் கெடுபிடி;கம்பத்தில் பொதுமக்கள் அதிருப்தி

கம்பம்: குடிநீர் டெபாசிட் வசூலில் நகராட்சி பணியாளர்கள் கெடுபிடி செய்து வருவதால் பொதுமக்கள் அதிருப்திருக்குள்ளாகியுள்ளனர். கம்பம் நகராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் 10 ஆயிரத்து 890 உள்ளது. மாத கட்டணமாக 41 ரூபாய் நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. சமீபகாலமாக நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது 15 கோடி ரூபாய்க்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடுகளுக்கு கடன் வாங்க "டுபிசெல்' நிறுவனத்தை நகராட்சி அதிகாரிகள் அணுகிய போது, கடனை திருப்பிச் செலுத்த டெபாசிட் மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நகராட்சிக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் வீட்டு இணைப்புகளுக்கு டெபாசிட் கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் என்று இருந்ததை நான்காயிரமாக உயர்த்த கவுன்சில் அனுமதி வழங்கியது. டெபாசிட் உயர்த்தியதை வசூல் செய்வதில் தற்போது நகராட்சி தீவிராக இறங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது; புதிய திட்டத்திற்காக டெபாசிட் உயர்த்தப் பட்டது என்கின்றனர். இத்திட்டம் இன்னும் துவங்கவே இல்லை. இது செயல்பாட்டிற்கு வர பல ஆண்டுகள் ஆகும். திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு டெபாசிட் மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம். அதைவிட்டு விட்டு நகராட்சி நிர்வாகம் தற்போதே கெடுபிடி வசூலில் ஈடுபட்டுள்ளது மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. டெபாசிட் உயர்வை 15 நாட்களுக்கு செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என்று பணியாளர்கள் மிரட்டுகின்றனர் என்றனர்.