Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நூலகத் துறைக்கு வரித்தொகை "டிமிக்கி' : சென்னை மாநகராட்சி ரூ.40 கோடி நிலுவை

Print PDF

தினமலர் 28.09.2010

நூலகத் துறைக்கு வரித்தொகை "டிமிக்கி' : சென்னை மாநகராட்சி ரூ.40 கோடி நிலுவை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் வரி வருவாயில் 10 சதவீதத்தை, பொது நூலகத் துறைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு இருந்தபோதும், எந்த அமைப்புகளும் 100 சதவீதம் அளவிற்கு வரியை செலுத்துவதில்லை என, பொது நூலகத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர். சென்னை மாநகராட்சி மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.

மாநிலம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. மற்ற துறைகளைப் போல், நூலகத் துறைக்கு பெரிய அளவில் வருவாய் கிடையாது. அரசு ஒதுக்கும் நிதியைக் கொண்டும், வாசகர்கள் மூலம் வசூலிக்கப்படும் சந்தா தொகையைக் கொண்டும் தான், இந்த துறை இயங்குகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் மொத்த வரி வருவாயில், 10 சதவீத நிதியை பொது நூலகத்துறைக்கு வழங்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்படி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள், வரி வருவாயில் 10 சதவீதத்தை, நூலகத்துறைக்கு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இந்த 10 சதவீத தொகையை முழு அளவில், நூலகத் துறைக்கு வழங்குவதில்லை என்றும், அந்த தொகையில் 40 சதவீதம், 50 சதவீதம் அளவிற்கே வழங்குகின்றனர் என்றும் நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

மாநகராட்சிகள் மூலம் வரும் வரி வருவாய் தான் கணிசமாக இருக்கிறது. ஆனால், மாநகராட்சிகளும் முழு தொகையை செலுத்துவதில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சிகளில் அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியிடம் இருந்து தான், நூலகத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு, கடந்த ஆண்டு 360 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 400 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு வருவாயில், 10 சதவீதமாக 36 கோடி ரூபாய், நூலகத்துறைக்கு வழங்க வேண்டும்.

ஆனால், பாதி தொகை மட்டுமே வழங்கியிருப்பதாக, நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2008-09, 2009-10 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 40 கோடி ரூபாயை சென்னை மாநகராட்சி நிலுவை வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறும்போது, "உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை வழங்கினால், கிராமப்புறங்களில் கூடுதலாக நூலகங்கள் திறக்கவும், நூலகங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உதவியாக இருக்கும். எந்த உள்ளாட்சி அமைப்புகளும், முழு தொகையை வழங்குவதே கிடையாது; அரைகுறையாகத் தான் வழங்குகின்றன. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நிலுவைத் தொகையை வழங்கினால், நூலகத் துறைக்கு கணிசமான அளவிற்கு நிதி கிடைக்கும்' என்றனர்.

-நமது சிறப்பு நிருபர்-