Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ப்பு நாய்க்கு வரி ஏய்ப்பு மாநகராட்சிக்கு ரூ1 கோடி இழப்பு

Print PDF

தினகரன் 07.10.2010

வளர்ப்பு நாய்க்கு வரி ஏய்ப்பு மாநகராட்சிக்கு ரூ1 கோடி இழப்பு

மும்பை,அக்.7: நாய் வளர்ப்பவர்கள் அதற்கு வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்வதால் மாநகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் 27,147 வளர்ப்பு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வளர்ப்பு நாய்களுக்கு அதன் உரிமையாளர் கள் மாநகராட்சியிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அதோடு ஒவ்வொரு ஆண்டும் இதற்கு 100 ரூபாய் வரி செலுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலானோர் தங்களது நாய்களுக்கு லைசென்ஸ் வாங்குவதில்லை. நகரில் 7,652 பேர் மட்டுமே தங்களது நாய்களுக்கு லைசென்ஸ் எடுத்துள்ளனர். எஞ்சியவர்கள் லைசென்ஸ் எடுக்காமல் மாநகராட்சியை ஏமாற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இவ்வாறு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்கவில்லையெனில் அவற்றை பறிமுதல் செய்வோம் என்று நாய் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தது. அப்படி இருந்தும் இன்னும் 20 ஆயிரம் பேர் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்காமல் இருக்கின்றனர்.

நகரில் நாய் கடிகளில் 25 சதவீதம் வளர்ப்பு நாய்களால் ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாய்களுக்கு லைசென்ஸ் எடுத்திருந்தால் அவற்றிற்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும். இதனால் நாய் கடியால் பிரச்னை வராது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டி.அம்பே அளித்த பேட்டியில்,’ வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அவற்றிற்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்று நினைக்க மறுக்கிறார்கள். அவர்கள் வார்டு அலுவலகத்திற்கு வர விரும்புவதில்லைஎன்று தெரிவித்தார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.

லைசென்ஸ் எடுப்பதால் என்ன பலன் என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைவரும் லைசென்ஸ் எடுக்க முன் வருவார்கள் என்று விலங்குகள் நல ஆர்வலர் அனுராதா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டத்தை விரைவில் மாநகராட்சி கொண்டுவர இருக்கிறது.