Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பு

Print PDF

தினமலர் 21.10.2010

பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பு

சென்னை : கல்வி நிறுவனங்களின் கட்டடங்களுக்கு ஊராட்சிகள் சொத்து வரி விதிப்பது செல்லும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை, நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் அரசூரில் உள்ள மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் பரமசிவம் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மற்றும் விதிகளின்படி, எங்கள் கல்லூரி கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 2008ம் ஆண்டு புதிய விதி கொண்டு வரப்பட்டது. அதன்படி, எங்கள் கல்லூரி கட்டடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி செலுத்த வேண்டும் என முத்துகவுண்டன்புதூர் கிராம ஊராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஊராட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்.ஏற்கனவே, ஒரு அப்பீல் மனுவை விசாரித்த மதுரை கிளையின், "டிவிஷன் பெஞ்ச்' (நீதிபதிகள் முகோபாதயா, வேணுகோபால் அடங்கிய பெஞ்ச்) எந்த காரணமும் குறிப்பிடாமல், முழு பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பியது. அவ்வாறு முழு பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பியது, சட்டத்துக்கு முரணானது. ஏனென்றால், ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை வழக்கில், இதே பிரச்னை குறித்து, "டிவிஷன் பெஞ்ச்' தீர்ப்பளித்துள்ளது.

அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், ஜெயபால் அடங்கிய முழு பெஞ்ச், "ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை வழக்கில், விதிகளில் கூறப்பட்டுள்ளபடி அல்லாமல், விதிவிலக்கு அளிக்க முடியாது என்ற சட்டப்பிரிவை (பிரிவு 176) "டிவிஷன் பெஞ்ச்' கவனிக்க தவறி விட்டது' என கூறியுள்ளது. முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தவறானது.ஊராட்சிகளில் உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பில் இருந்து விதிவிலக்கு அளிக்க மறுக்கின்றனர். ஆனால், நகராட்சிகள், மாநகராட்சிகளின் கீழ் வரும் கட்டடங்களுக்கு விதிவிலக்கு உள்ளது. இது பாரபட்சமானது. நகர்ப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு பல நன்மைகள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இல்லை.

கிராமப்புறங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கல்வி போதிக்கிறது. அவ்வாறு செயல்படும் கல்வி நிறுவனங்களை தண்டிக்கக் கூடாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி விதிக்க வகை செய்யும் புதிய விதியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் கங்குலி, வக்கீல் கந்தவடிவேல் துரைசாமி ஆஜராகினர். மனு மீதான விசாரணையை நவ., 23ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.