Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்தாத கட்டடங்கள் கணக்கெடுப்பு

Print PDF

தினமணி 26.10.2010

வரி செலுத்தாத கட்டடங்கள் கணக்கெடுப்பு

திருநெல்வேலி, அக். 25: திருநெல்வேலி மாநகர் பகுதியில் வரி செலுத்தாத கட்டடங்களை கண்டறிய தனியார் மூலம் கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவை தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநகரில் பல குடியிருப்புகள், வணிக வளாகங்கள் வரி விதிப்புக்கு உட்படாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியவந்துள்ளது.

இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை மாநகராட்சி கண்டறிந்துள்ளது. இதையடுத்து, இவ்வாறு வரி விதிப்புக்கு உட்படாமல் இருக்கும் கட்டடங்கள், குடியிருப்புகளை கண்டறிந்து, அவற்றிடம் வரி வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப் பணியை குறுகிய காலத்துக்குள் கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கு போதிய ஊழியர்கள் மாநகராட்சியில் இல்லையென கருதப்படுகிறது. இதனால் இக் கட்டடங்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிக்கு தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு கல்லூரிகளை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்கு செவ்வாய்க்கிழமை (அக்.26) காலை 11 மணிக்கு நடைபெறும் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இக் கூட்டத்துக்கு மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார்.

துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மேலும் மாநகரை சுகாதாரமாக வைப்பதற்கு மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநகராட்சி பகுதிகளில் தினமும் துப்புரவு பணி மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள், சங்கர்நகரில் இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கழிவு பிளாஸ்டிக் பொருள்களை சில தனியார்கள், விலைக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி கிலோவுக்கு ரூ. 2.65 தொடங்கி ரூ. 2.10 வரை விலைக்கு வாங்குவதாக சிலர் ஒப்பந்தம் கோரியுள்ளனர். ஒப்பந்த புள்ளிகளின் படி அதிகபட்சமாக கிலோ பிளாஸ்டிக் ரூ. 2.65 கேட்டுள்ளவருக்கு, கழிவு பிளாஸ்டிக் பொருள்களை வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு புதிதாக வருவாயும் கிடைக்கும். இதற்கான தீர்மானம் மாமன்ற அவசரக் கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. இதேபோல பல முக்கியத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.