Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் விரைவில் அமல் வீடுகளில் குப்பைகளை பெற சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம்

Print PDF

தினகரன்                18.11.2010

கோவை மாநகராட்சியில் விரைவில் அமல் வீடுகளில் குப்பைகளை பெற சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம்

கோவை, நவ. 18: கோவை மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் 600 முதல் 650 மெட்ரிக் டன் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக ரூ96.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட உள்ளது. மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வீடுகளில் இருந்து பெற 4.58 லட்சம் குப்பைக்கூடைகள் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணி, 9 வார்டுகளில் பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை 72 வார்டுகளில், முழு அளவில் செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றுதல், தரம் பிரித்தல், வெள்ளலூரில் கழிவு கட்டமைப்பு ஏற்படுத்துதல், உரம் தயாரித்தல் போன்ற பணிகள் இனி தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இதற்கிடையே, குப்பைகளை வீடு, நிறுவனங்களிலிருந்து பெற கட்டணம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீடு, நிறுவனங்களின் சொத்து வரி அளவுக்கு ஏற்ப கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி 6 மாதத்துக்கு ரூ500 வரை செலுத்தும் வீடுகளுக்கு மாதம் ரூ10, ரூ501 முதல் ரூ1000 வரை செலுத்தும் வீடுகளுக்கு ரூ20, இதற்கு மேல் வரி செலுத்தினால் ரூ30 கட்டணம், தினமும் 3 டன் அளவு குப்பை சேகரமாகும் வணிக நிறுவனம், கடை, வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு மாதம் ரூ500, இதற்கு அதிகமாக குப்பை சேர்ந்தால் ரூ1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தமிழகத்தில் இதுதான் முதன்முறை. விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ9 கோடி வருவாய் கிடைக்கும்.

இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "குப்பைகளை அகற்றுவதற்கு கட்டணம் விதிக்க, சட்ட வடிவு, விதிமுறை விவரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கிய பின்னர், திட்டம் நடைமுறைக்கு வரும். வீடுகளில் குப்பை எடுக்க கட்டணம் விதிக்க மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது" என்றார்.