Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரிங்ரோட்டில் மாநகராட்சி டோல்கேட் வரி வசூலை எதிர்த்து மனுக்கள்

Print PDF

தினமலர்                    08.12.2010

ரிங்ரோட்டில் மாநகராட்சி டோல்கேட் வரி வசூலை எதிர்த்து மனுக்கள்

மதுரை: மதுரை ரிங் ரோட்டில் மாநகராட்சி நிர்வாகம் டோல்கேட் வரி வசூலிப்பதை நிறுத்த பஸ் உரிமையாளர்கள் சார்பில் தாக்கலான மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை, விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்கள்:மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பஸ்கள் ஏற்கனவே மதுரை மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை சென்றன. மதுரைக்குள் நெருக்கடியை தவிர்க்க மாட்டுத்தாவணிக்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டது. அங்கு பஸ்கள் செல்ல ரிங் ரோடு 47.35 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ரிங்ரோடு வழியாக 2000 நவ., 1 முதல் பஸ்கள் செல்ல உத்தரவிட்டது.

 ரிங்ரோட்டில் டோல்கேட் வரி வசூலிக்கும் உரிமையை மாநகராட்சிக்கு வழங்கியது. ரிங் ரோடு அமைக்கும் செலவு, அதை நிர்வாகிக்கும் செலவு, அதற்காகும் வட்டி ஆகியவை எட்டும் வரை ஐந்தாண்டுகளுக்கு வரி வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டது. அந்த தொகைகள் வரவான பின்னும், மாநகராட்சி டோல்கேட் வரி வசூலிக்கிறது. வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும். மேலும் 2005 நவ., 1 முதல் வசூலித்த தொகையை திருப்பி வழங்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. இதற்கு மாநகராட்சி வக்கீல் எம்.ரவிசங்கர், அரசு வக்கீல் மனோகரன் ஆட்சேபம் தெரிவித்தனர்.மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் கோரிக்கையை பரிசீலிக்க போதிய காரணங்கள் இல்லை. அரசு உத்தரவில் மாநகராட்சி 15 ஆண்டுகளுக்கு வரி வசூலிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுக்கள் நிலைநிற்கத்தக்கது அல்ல, என குறிப்பிட்டார்.