Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சியில் ரூ80 கோடி வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை கமிஷனர் பேட்டி

Print PDF

தினகரன்                09.12.2010

மதுரை மாநகராட்சியில் ரூ80 கோடி வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை கமிஷனர் பேட்டி

மதுரை, டிச. 9: மதுரை மாநகராட்சியில் ரூ80 கோடி வரி பாக்கி உள்ளது. இதனை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கமிஷனர் கூறினார்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 177 சொத்து வரி விதிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு வசூலாக வேண்டிய ரூ50 கோடி சொத்து வரியில், இதுவரை ரூ24 கோடிதான் வசூலாகி உள்ளது. முந்திய ஆண்டு வரிகள் ரூ15 கோடி வசூலாகவில்லை. இதுதவிர காலி மனை வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி, மாநகராட்சி கடை வாடகை என அதிகம் வசூலாகவில்லை. அனைத்தும் சேர்ந்து மொத்தம் ரூ80 கோடி வசூலாகாமல் பாக்கி உள்ளது. இதில் அரசு கட்டிடங்களின் வரி மட்டும் ரூ8 கோடி. அந்த அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றன. வசதி படைத்தோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வரியை செலுத்தாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். பாக்கியை வசூலிக்க ஜப்தி மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு வழங்கிய ரூ33 கோடியில் 117 சாலைகள் புதுப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கி உள்ளன. சாலைகளில் படிந்துள்ள புழுதியை துப்புரவு பணியாளர் மூலம் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காலையில் குப்பை அகற்றும் பணியும், பிற்பகலில் புழுதியை அகற்றி சுத்தப்படுத்தும் பணியும் நடைபெறும்.

மின் விநியோக பிரிவை மாநகராட்சியிடம் இருந்து மின் வாரியம் ஏற்றபோது, சொத்துகளும் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக மாநகராட்சிக்கு வாரியம் ரூ49 கோடி கொடுக்க வேண்டும் என கணக்கிடப்பட்டது. இதுகுறித்து அரசு நியமித்த குழு முடிவின்படி செயல்படுத்தப்படும். இவ்வாறு ஆணையாளர் கூறினார்.