Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எல்லையில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்த கடும் எதிர்ப்பு

Print PDF

தினகரன்     17.12.2010

மாநகராட்சி எல்லையில் உள்ள குடியிருப்புகளுக்கு சொத்து வரியை உயர்த்த கடும் எதிர்ப்பு

புதுடெல்லி,டிச.17: மாநகராட்சி எல்லைக்கு மிக அருகில் இருக்கும் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சொத்து வரியை உயர்த்த மாநகராட்சி ஆய்வுக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க, மாநகர எல்லைக்கு மிக அருகில் உள்ள 168 குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு சொத்து வரி விதிக்க மாநகராட்சி மதிப்பீட்டுக் குழு முடிவு செய்தது.

இதற்காக ஏற்கனவே இருந்து வரும் மாநகராட்சி மதிப்பீட்டு வழிகாட்டி முறைகளில் சில மாற்றங்களை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி மாநகராட்சியின் தன்மைக்கு ஏற்ப நகரப்பகுதிகள், ‘ஏ’ முதல் ‘எச்’ வரை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ‘பி’ பிரிவில் உள்ள 12 குடியிருப்புகள் ‘ஏ’ பிரிவுக்கும், ‘சி’ பிரிவில் உள்ள 20 குடியிருப்புகள் ‘பி’ பிரிவுக்கும், ‘டி‘ பிரிவில் உள்ள 42 குடியிருப்புகள் ‘சி’ பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளன.

இப்போது மாநகராட்சிக்கு வீட்டு வரியின் மூலம் ஆண்டுக்கு ரூ. 696.46 கோடி வருவாய் கிடைக்கிறது. புதிய மாநகராட்சி வழிகாட்டு மதிப்பீட்டின் மூலமும் திருத்தப்பட்ட வரி விதிப்பின் மூலமும் மாநகராட்சிக்கு 2010&11 ம் ஆண்டு, வீட்டு வரியாக மட்டும் ரூ. 1660 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி வழிகாட்டு மதிப்பீட்டு குழு கொடுத்த இந்த சிபாரிசின் அடிப்படையில் மாநகராட்சி எல்லைக்கு அருகில் உள்ள 168 குடியிருப்புகள் வருகின்றன. அந்த குடியிருப்புகளுக்கு புதிதாக வரி விதிக்கப்படுவதுடன், ஏற்கனவே இருந்த பிரிவுகளில் இருந்து வேறு பிரிவுக்கு மாற்றியதால் இனிமேல் ஏராளமானவர்கள் கூடுதலாக சொ த்து வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதுபற்றி ஆராய மாநகராட்சி பா.ஜ. உறுப்பினர் வி.பி.பாண் ட்யா தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை மாநகராட்சியிடம் நேற்று தாக்கல் செய்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நகர சொத்துக்களுக்கான(வீடுகளுக்கான) மதிப்பீடு அது அமைந்துள்ள இடம், அங்கு நிலவும் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் உட்பட அடிப்படை வசதிகளை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் அடிப்படை வசதிகளில் எதையுமே அதிகரிக்காமல், பிரிவுகளை மாற்றி அமைப்பதன் மூலம் வீடுகளுக்கு கூடுதலாக வரி விதிப்பதை இக்குழு நிராகரிக்கிறது.

அதேசமயம் அந்தப் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றுக்கு கூடுதலாக வரி விதிக்க இருப்பதை இக்குழு ஏற்றுக் கொள்கிறது. டெல்லி மேம்பாட்டு ஆணையப் பகுதியில் உள்ள டிரான்ஸ் யமுனா பகுதி வீடுகளுக்கான சொத்து வரியை உயர் த்தவும் இக்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த ஆய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி மாநகராட்சி நிலைக் குழு தலைவர் யோகேந்தர் சந்தாலியா, நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசை அப்படியே அமல்படுத்தியிருந்தால் டெல்லி நகர வாசிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியிருப் பார்கள். இப்போது 9 லட்சம் பேர் மட்டுமே சொத்துவரி செலுத்துகின்றனர். 22 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துவதில்லை. அவர்களிடம் முறையாக சொத்து வரி வசூலித்தாலே மாநகராட்சியின் வருவாய் தானாக உயர்ந்து விடும்.

இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதன் மீது பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுடன் சேர்த்து இந்த பரிந்துரை, நிலை குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்படும்.

அதன்பிறகு இதுபற்றி ஆலோசித்து மாநகராட்சி நிலைக் குழு தனது இறுதி முடிவை அறிவிக்கும். இவ்வாறு நிலைக் குழு தலைவர் சந்தாலியா கூறினார்.