Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி மூலம் வாகன வசூல்

Print PDF
தினமணி      04.01.2011

பேரூராட்சி மூலம் வாகன வசூல்

கொடுமுடி, ஜன. 3: கொடுமுடியில் கடந்த சில நாள்களாக பேரூராட்சிப் பணியாளர்கள் மூலம் வாகன நுழைவு வரி வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்ட கோயில் நகராகவும் திகழ்கிறது கொடுமுடி.

  இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க, பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்படுகிறது.

  கனரக வாகனங்களுக்கு ரூ. 25-ம், இலகு ரக வாகனங்களுக்கு ரூ. 10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் போலி ரசீதைக் கொண்டு, இலகுரக வாகனங்களுக்கு ரூ. 25 வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

  இது தொடர்பாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இருவரை போலீசார் கைது செய்தனர்.

  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமையில், அதிமுக, இந்திய கம்யூ. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார்  தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து கடந்த வாரம், மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா, கொடுமுடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதையறிந்த ஆட்சியர், ஏலதாரரின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

  இதனைத் தொடர்ந்து, பேரூராட்சிப் பணியாளர்கள் வாகன வசூலில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டுள்ளனர்.

  இது தொடர்பாக பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறுகையில், கடந்த மாதம் கோயிலுக்கு காரில் வந்த பொழுது ரூ. 25 கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் தற்போது நியாயமான கட்டணத்தை கேட்டுப் பெறுகின்றனர். இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றார்.

  கொடுமுடியைச் சேர்ந்த பி.செல்லமுத்து கூறுகையில், முன்பெல்லாம் கொடுமுடியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வரும்போதுகூட, ஏலதாரர்கள் வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக தினமணி மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.