Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமலர் செய்திக்கு கமிஷனர் உடனடி ஆக்ஷன்: வரிச் செலுத்த வரும் பொதுமக்கள் கடும் குஷி

Print PDF

தினமலர்   02.08.2012

தினமலர் செய்திக்கு கமிஷனர் உடனடி ஆக்ஷன்: வரிச் செலுத்த வரும் பொதுமக்கள் கடும் குஷி

தூத்துக்குடி : தினமலர் செய்தியை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால் மாநகராட்சிக்கு வரி செலுத்த வரும் பொதுமக்கள் நிம்மதியாக தங்களது வாகனங்களை விட்டு வரிச் செலுத்தி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நகரின் இதயமான பகுதியில் அமைந்துள்ளது. இதனை சுற்றி மார்கெட் உள்ளிட்ட இடங்கள் இருப்பதால் இந்த பகுதி எப்போதும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறது.

மாநகராட்சிக்கு தினமும் சொத்துவரி உள்ளிட்ட வரிகளை கட்டவும், அடிப்படை வசதிகளுக்காக அதிகாரிகளை அணுகவும், பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிகமான மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களது வாகனங்களை அலுவலகத்திற்குள் விடுவதற்கு கூட இடமில்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கு காரணம் மாநகராட்சி அலுவலகத்தை அறிவிக்கப்படாத வாகன காப்பகம் போல் மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள கடைக்காரர்கள், வியாபாரிகள் என்று பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தவிர பொதுமக்கள் சிலர் திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை லாக் செய்து பூட்டி வைத்து விட்டு சென்று விடுகின்றனர். திரும்ப அவர்கள் இஷ்டத்திற்கு வரும் போது எடுத்து செல்கின்றனர்.

சில டூவிலர்கள் இரண்டு நாள் முதல் நான்கு நாட்கள் வரை வேப்பமர நிழலில் நிற்கும் நிலை உருவாகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அதிகமான இருசக்கர வாகனங்களை இப்படி வைத்து விட்டு சென்று விடுவதால் வரிச் செலுத்த வருவோர் வாகனத்தை நிறுத்த முடியாமலும், மாநகராட்சி நான்கு சக்கர வாகனங்கள் கூட நிறுத்த முடியாத அளவிற்கு நிலமை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக தினமலரில் படத்துடன் செய்தி வெளியாகியது. தினமலர் செய்தியை தொடர்ந்து கமிஷனர் மதுமதி இது சம்பந்தமாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். மாநகராட்சி பணியாளர்கள் அனாவசியமாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

அவர்களை இங்கு வாகனங்கள் நிறுத்த கூடாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். மீறி வாகனத்தை விட்டால் அதனை லாக் மூலம் பூட்டி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனை கண்காணிக்க பணியாளர்களை நியமிக்குமாறும் கமிஷனர் மானேஜருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வெளியாட்களின் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. வரி செலுத்த வருவோர் வாகனம் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாநகராட்சி ஊழியர்கள் வெற்றி, முனியசாமி ஆகிய இரண்டு பணியாளர்கள் மாநகராட்சி வாயில் பகுதியில் நின்று அனாவசியமாக உள்ளே வரும் வாகனங்களை உள்ளே அனுமதிக்க விடாமல் தடுத்தனர்.

வழக்கமாக வெளியாட்கள் வாகனத்துடன் உள்ளே வரும் போதே தடுத்து நிறுத்தி அவர்களை வெளியில் அனுப்பினர். இதனால் பல வாகனங்கள் நேற்று உள்ளே வராமலே வெளியில் சென்றன. இதனால் ஒட்டு மொத்த வாகன காப்பகம் போல் இருந்த மாநகராட்சியின் வாயில் பகுதி இருசக்கர வாகனங்கள் இல்லாமல் அந்த இடமே பளிச் சென்று காணப்பட்டது.இந்த இடங்களில் நோ பார்க்கிங் போர்டு வைத்தால் நன்றாக இருக்கும். அதனை மாநகராட்சி செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சி அலுவலகத்திற்கு பின் பகுதியில் அதிகமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு வாகனம் நிறுத்துவதற்கு இடம் அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.