Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் பரபரப்பு ரூ.23 கோடி வரி தள்ளுபடி மீண்டும் கிளம்புகிறது புயல்

Print PDF

தினகரன்    16.08.2012

மாநகராட்சியில் பரபரப்பு ரூ.23 கோடி வரி தள்ளுபடி மீண்டும் கிளம்புகிறது புயல்

மதுரை, : தனியார் நிறுவனம் ஒன்றின் வரி பாக்கி ரூ.27 கோடியில், 23 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது குறித்து 10 மாதங்களுக்கு பிறகு ஒருவர் தகவல் உரிமை சட்டத்தில் மனு அளித்து கேட்பதால், மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து புயலை கிளப்புகிறது.

மதுரையில் ஒரு தனியார் ஆலைக்கு 1983ம் ஆண்டு முதல் சொத்து வரி பாக்கி இருந்தது. மாநகராட்சியில் ஆணையாளராக இருந்த பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நோட்டீஸ் அனுப்பியும், அந்த நிறுவனம் பரப்பளவு அளவில் தவறு இருப்பதாக வழக்கு போட்டு வரி பாக்கி செலுத்தாமல் இருந்தது. 28 ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வில் ஆணையாளர்கள் வரியை குறைக்க அனுமதிக்கவில்லை. ஆண்டு தோறும் வரி பாக்கி அதிகரித்து கொண்டே போனது.

கடந்த 2011 ஜூன் முதல் டிசம்பர் வரை ஆணையாளர் பொறுப்பில் இருந்த நடராஜன் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆய்வு நடத்தினார். அப்போது மொத்த பாக்கி ரூ.27 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 659 ஆக இருந்தது. 2011 அக்டோபர் 18, 24 ஆகிய இரு தேதிகளில் ஆலை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிரடியாக ரூ.22 கோடியே 78 லட்சத்து 15 ஆயிரத்து 349 தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.4 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரத்து 310 மட்டும் வசூலித்து முடிக்கப்பட்டது. தற்போதைய ஆண்டு வரி ரூ.33 லட்சத்து 79 ஆயிரத்து 344 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ரூ.23 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்தது குறித்து அப்போதைய ஆணையாளர் மாநகராட்சி மன்ற ஒப்புதலும் பெறவில்லை. இந்த விவகாரம் மாநகராட்சி தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி மன்றத்தில் பிரச்னை கிளம்பியபோது அது குறித்து தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார். பெரும் தொகையை அதிரடி தள்ளுபடி செய்த ஆணை யாளர் நடராஜன் கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்று சென்று விட்டார். இந்த விவகாரம் தொடர்பான கோப்புகள் மூலையில் தூக்கி போடப்பட்டன. தொடர்புடைய அதிகாரிகள் தப்பித்தோம் என நிம் மதி பெருமூச்சு விட்டனர்.

இந்தச் சூழலில் ரூ.23 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்கள் வேண்டும் என கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் படி ஒருவர் மாநகராட்சியில் மனு அளித்துள்ளார். இதனால் விவரங்கள் ரிக்கார்டு பூர்வமாக நகல் எடுத்து அளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே மூலையில் தூக்கி போடப்பட்ட கோப்புகள் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளன. 10 மாதங்களாக மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் தகவல் உரிம சட்டத்தால் மீண்டும் புயலை கிளப்பும் என தெரிகிறது.

கட்டிடமோ 5 மாடிவரி விதிப்பு 2 மாடிமதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள், பில் கலெக்டர்கள் கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டி வரி வருவாய்குறித்து ஆய்வு நடத்தினார். மாநகராட்சி துணை ஆணையாளர் சாம்பவி தலைமையிலான குழுவினர் ஆஸ்பத்திரி, வர்த்தக கட்டிடம், வீடு உள்பட 15 கட்டிடங்களை அளந்து மறு ஆய்வு செய்ததில் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு வரி குறைத்து நிர்ணயித்து வசூலித்துவந்தது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, பல்வேறு கட்டிடங்களை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ததில் ரூ.3 கோடியே 30 லட்சம் வரி குறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 5 மாடி உள்ள கட்டிடத்துக்கு 2 மாடிக்கு மட்டும் வரி விதிக்கப்பட்டது, வர்த்தக கட்டிடத்தை வீடாக காட்டி வரி நிர்ணயித்தது, மொத்த அளவுகளை குறைத்தல் போன்ற முறைகேடுகள் மூலம் பெரும் தொகை வரியை குறைத்து மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களுக்கு தற்போது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.

வரி விதிக்கப்படாத கட்டிடங்களும், அளவு குறைத்தல், வர்த்தக கட்டிடத்தை வீடுகளாக கணக்கு காட்டுதல் உள்பட பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. எனவே அனைத்து கட்டிடங்களையும் மறு ஆய்வின் மூலம் அளந்து கணக்கிட்டால் மாநகராட்சி வருவாய் பல கோடிகள் அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.