Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் காலியிட வரி குறைகிறது

Print PDF

தினமணி 09.09.2009

கோவை மாநகராட்சியில் காலியிட வரி குறைகிறது

கோவை, செப். 8: கோவை மாநகராட்சியில் காலியிட வரியை குறைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழக அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி காலியிட வரியை நிர்ணயம் செய்து 1.9.2009 முதல் அமல்படுத்தலாம் என்றும் முன்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு வரிவிதிப்பு செய்யப்படாமல் இருந்தால் அந்த விண்ணப்பங்களுக்கும் அரசு ஆணைப்படியே புதிய விகிதத்தில் காலியிட வரி நிர்ணயம் செய்யலாம்.

கோவை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் பெறப்படும் வரி விதிப்பு, கட்டட அனுமதி மற்றும் இதர விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

4 மண்டலங்களிலும் சொத்துவரி விதிப்பில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். சொத்துவரி விதிக்க சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுடன் மாநகராட்சியின் கட்டட அனுமதி கோரி விண்ணப்பத்தின் ஒப்புகைச்சீட்டு உள்ளிட்டவற்றுடன் அனுப்ப வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் 6 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலம் ஆகிய இடங்களின் நில உரிமையை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றுவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்படும்.

துணை மேயர் நா.கார்த்திக், மண்டல தலைவர்கள் வி.பி.செல்வராஜ், எஸ்.எம்.சாமி, சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குழுத் தலைவர் கே.புருசோத்தமன் உள்பட பலர் பங்கேற்றனர்.