Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வரி வசூல் செய்வதில் சிக்கல்: பொதுமக்கள் ஆவேசம்

Print PDF
தின மலர்                26.02.2013

குடிநீர் வரி வசூல் செய்வதில் சிக்கல்: பொதுமக்கள் ஆவேசம்

சேலம்: சேலம் மாநகராட்சியில், முறையாக, குடிநீர் வினியோகம் செய்ய முடியாததால், குடிநீர் வரியை வசூல் செய்வதில், அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில், சொத்துவரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்ளிட்டவற்றை வசூல் செய்யும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் இறுதிக்குள் நிலுவை வரியை வசூல் செய்வதற்காக, நான்கு மண்டலங்களில், விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தும், ஆட்டோக்கள் மூலம், அறிவிப்பு வெளியிட்டும், வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தினமும் சொத்துவரி மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி பகுதியில், சில மாதங்களாக, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல வார்டுகளில், மாதம் இரண்டு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒவ்வொரு வார்டிலும், வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ள பில் கலெக்டர் உள்ளிட்ட வரி வசூல் பணியாளர்களிடம், பொதுமக்கள், குடிநீர் பிரச்னையை சுட்டிக்காட்டி, குடிநீர் வரியை, உடனடியாக செலுத்தாமல், இழுத்தடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு சில வார்டுகளில், கெடுபிடி காட்டும், வரி வசூல் பணியாளர்களிடம், பொதுமக்கள் காட்டமாக வாக்கு வாதம் செய்கின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் வேறு வழியில்லாமல், சொத்துவரி, கடை வாடகை உள்ளிட்டவற்றை மட்டுமே அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர்.

மார்ச் மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடிநீர் வரியை வசூல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், குடிநீர் வரியை வசூல் செய்யும் போது, இதுப்போன்ற பிரச்னை ஏற்படுவது வழக்கமாகும். ஆனால், சில மாதங்களாக, குடிநீர் பிரச்னையால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், ஒரு சில வார்டுகளில், குடிநீர் வரியை கேட்டு செல்லும், மாநகராட்சி பணியாளர்களிடம், சிலர் வாக்குவாதம் செய்கின்றனர். பலர் மார்ச் மாதம் முடிந்தவுடன் தருவதாக கூறி அலைக்கழிக்கின்றனர்.இவ்வாறு கூறினார்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:35