Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனி கோவில் வரிபாக்கி ரூ. 2.50 கோடி

Print PDF
தினமணி           01.03.2013

பழனி கோவில் வரிபாக்கி ரூ. 2.50 கோடி


பழனி திருக்கோயில் இரண்டரை கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளதாக, நகர்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பழனி நகர்மன்றக் கூட்டம், நகராட்சி பழனியாண்டவர் ஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். இதில், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், ஆணையர் பாலகிருஷ்ணன், நகரமைப்பு அலுவலர், கவுன்சிலர்கள், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் ஏற்பட்டு இடையூறுகளைத் தெரிவித்தனர். அப்போது, இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனக் கூறிய தலைவர், இதனால் தனக்கே தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார். கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாவண்ணம், நீர்த்தேக்கங்களை தூர்வாரவும், பழனி-புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பழனி பேருந்து நிலையம் மற்றும் தியேட்டர்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, பழனி திருக்கோவில் வரிபாக்கி குறித்து கேட்கப்பட்டபோது, ரூ. 2.50 கோடி வரிபாக்கி செலுத்தவேண்டும் என ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பின்னர், பழனி-திருச்செந்தூர், பழனி-சென்னைக்கு ரயில் விடப்பட்டதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்களும், காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தமைக்கு, தமிழக முதல்வருக்கு துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையில் அ.தி.மு.க.வினரும், காவிரி நடுவர் நீதிமன்றத்தை பிரதமர் வி.பி.சிங் காலத்தில் நிறுவிய திமுக தலைவர் கருணாநிதிக்கு தலைவர் வேலுமணி தலைமையில் திமுக கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அதேவேளை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேறினர்.
Last Updated on Friday, 01 March 2013 09:36