Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்துவரி ரசீதில் முகவரி குளறுபடி

Print PDF
தினமணி              07.03.2013

சொத்துவரி ரசீதில் முகவரி குளறுபடி


சொத்து வரி ரசீதில் முகவரி மாற்றி அச்சிட்டுத் தரப்படுவதால் சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதியினர் குழப்பத்தில் உள்ளனர்.

முதலில் 10 மண்டலங்களாக இருந்த சென்னை மாநகராட்சி, அருகில் இருந்த நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து 15 மண்டலங்களாக விரிவாக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை, சுகாதாரம், துப்புரவு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. இது அந்தப் பகுதிகளின் வளர்ச்சியில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

சென்னை நகரில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுவதற்கு பல கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டததால் சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சொத்து வரி ரசீது: இந்த நிலையில், சொத்து வரி செலுத்தும் முறையை மாநகராட்சி கணினி மயமாக்கியுள்ளது. ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இந்த வசதி முழுமையாக சென்றடையவில்லை. சில மண்டலங்களில் பழைய முறைப்படியே சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கணினி மயமாக்கப்பட்ட சில விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தவறான முகவரி அச்சிட்டுத் தரப்படுகிறது. கணினியில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்றும், அடுத்தமுறை வரி செலுத்தும்போது இந்த பிரச்னை சரி செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012-13 நிதியாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், இந்த முகவரி குழப்பத்தால் இரண்டாவது தவணை சொத்து வரியை செலுத்துவதில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியினர் பெரும்பாலும் ஆர்வம் செலுத்தவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்தப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கணினி மயமாக்கும் வசதிகள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ரசீதில் உள்ள முகவரியை மாற்றக்கோரி பலமுறை மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இந்த முகவரி குளறுபடியால் மீண்டும் வரி செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டு விடுமோ என்ற குழப்பம் நிலவி வருகிறது என்று தெரிவித்தனர்.

இணையதளம்: மாநகராட்சி இணையதளத்தில் சொத்து வரி செலுத்தும்போது, வரி செலுத்துநரின் தொலைபேசி எண் கேட்கப்படுகிறது. ஆனால் இந்த வசதி கூட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு இல்லை.

அதில் பழைய சென்னை மாநகராட்சிப் பகுதிகளின் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மட்டும் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

பல்வேறு வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், அந்த பகுதி மக்கள் சென்னை மாநகராட்சியுடன் தங்கள் பகுதி சேர்க்கப்பட்டது வீண் என்று கடும் அதிருப்தியில் உள்ளனர்.