Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் ரூ.84½ கோடி சொத்து வரி வசூல் ரூ.19 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி                21.03.2013

கோவை மாநகராட்சியில் ரூ.84½ கோடி சொத்து வரி வசூல் ரூ.19 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை 

கோவை மாநகராட்சியில் ரூ.84½ கோடி சொத்து வரி வசூல் ஆகி உள்ளது. ரூ.19 கோடியே 25 லட்சம் சொத்து வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 90 சதவீத வரி வசூல் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் குறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:–

 ரூ.84½ கோடி வசூல்

கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு சொத்து வரி வசூல் 87 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 90 சதவீத அளவுக்கு சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வரி வசூலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் சொத்து வரியாக ரூ.103 கோடியே 66 லட்சம் வசூல் ஆக வேண்டும். நேற்றுவரை ரூ.84 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரம் வசூல் ஆகி உள்ளது. இது 81 சதவீதம் ஆகும். இன்னும் ரூ.19 கோடியே 25 லட்சம் வரி வசூல் ஆக வேண்டியது உள்ளது.

 மண்டல வாரியாக

மண்டல வாரியாக வரி வசூல் விவரம் வருமாறு:–

கிழக்கு மண்டலம்– ரூ.16 கோடியே 19 லட்சம் சொத்து வரி வசூலாகி உள்ளது. வரி வசூல் விகிதம் 77 சதவீதம் ஆகும். மேற்கு மண்டலம்– ரூ.16 கோடியே 58 லட்சம். வரி வசூல் விகிதம் 87 சதவீதம் ஆகும். தெற்கு மண்டலம்– ரூ.8 கோடியே 49 லட்சம். வரி வசூல் விகிதம்–73 சதவீதம். வடக்கு மண்டலம்– ரூ.15 கோடியே 4 லட்சம். வரி வசூல் விகிதம்–82 சதவீதம். மத்திய மண்டலம்– ரூ.28 கோடியே 8 லட்சம். வரி வசூல் விகிதம்–84 சதவீதம் ஆகும்.

மார்ச் 31–ந்தேதிவரை வரி செலுத்துவதற்கான காலநிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.