Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.5 கோடி வரி நிலுவை வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லாமல் திண்டாடும் கடலூர் நகராட்சி

Print PDF
தினமணி         30.03.2013

ரூ.5 கோடி வரி நிலுவை வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லாமல் திண்டாடும் கடலூர் நகராட்சி


கடலூர் நகராட்சிக்குச் சேர வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி ரூ.5 கோடி நிலுவையில் உள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கூட நிதி இல்லாமல் நகராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது.

கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் குடிநீர் கட்டணமாக ரூ.4 கோடி, சொத்து வரியாக ரூ.12 கோடி வசூல் செய்யப்படுகிறது. 2012-2013 நிதியாண்டு முடிவடைய இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் நகராட்சிக்குச் சேர வேண்டிய குடிநீர் கட்டணம் ரூ.1.75 கோடி, சொத்து வரி ரூ.3.86 கோடி என மொத்தம் சுமார் ரூ.6 கோடிக்கு வரி வசூலாகாமல் உள்ளது.

கடலூர் நகர்மன்றப் பிரதிநிதிகளிடையே தொடரும் மோதல் காரணமாக கடந்த 6 மாதங்களாக நகராட்சிப் பணிகள் முடங்கி கிடந்தது. கடந்த 6 மாதங்களாக ஆணையர் பணியிடமும் காலியாக இருந்தது.

இந்நிலையில் புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுள்ள ப.காளிமுத்து இப்போது நகராட்சிப் பகுதிகளில் தினமும் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக நகராட்சிக்குச் சேர வேண்டிய வருவாய் வரி இனங்களை வசூலிக்க அவர் நேரடியாக வணிக நிறுவனங்களுக்கு செல்கிறார். கடலூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெரு, லாரன்ஸ் ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர் போன்ற பகுதிகளில் அவர் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினார்.

அப்போது 265 வீடு, கடைகளில் குடிநீர் வரி செலுத்தாமல் இருந்தனர். இதைக் கண்டறிந்த ஆணையர் காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர்.

மேலும் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கும் நேரில் சென்று எச்சரித்தார்.  இது குறித்து ஆணையர் காளிமுத்துவிடம் கேட்டபோது, குடிநீர் மற்றும் சொத்து வரி இனங்கள் மட்டும் ரூ.5.25 கோடி அளவுக்கு வசூலாகாமல் உள்ளது.

சொத்துவரி நிலுவையில் பெரும் தொகை வர்த்தக நிறுவனங்கள்தான் செலுத்தாமல் உள்ளன. வாடகை கொடுக்காமல் இருந்தால் கட்டட உரிமையாளர் கடை வைத்திருக்க விடுவாரா? என்பதை வர்த்தர்கள் சிந்திக்க வேண்டும்.

வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.