Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொழில் வரியை வசூல் செய்ய மாநகராட்சி புதிய முயற்சி

Print PDF
தினமணி       04.04.2013

தொழில் வரியை வசூல் செய்ய மாநகராட்சி புதிய முயற்சி


தொழில் நிறுவனங்களிடம் இருந்து தொழில் வரியை வசூல் செய்ய சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி தொழில் வரி வசூல் செய்கிறது. இந்த வரி ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சிக்கும், நிறுவனத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகளை இந்த நிதியாண்டின் (2013-14) தொடக்கத்தில் இருந்தே வசூல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களின் பட்டியலை வருமான வரித் துறை, தொழிலாளர் நலத் துறை போன்றவற்றிடம் இருந்து பெற்று கடந்த ஆண்டு வரி செலுத்தியோர் பட்டியலுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது: சொத்து வரி மற்றும் தொழில் வரிகளை ஆண்டின் இறுதியில் மட்டும் தீவிரமாக வசூல் செய்யாமல் ஆண்டுத் தொடக்கத்திலேயே வசூல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வருமான வரித் துறையில் வரி செலுத்தியவர்கள், தொழிலாளர் நலத் துறை, கம்பெனி சட்டத்தில் பதிவு செய்தவர்கள் பட்டியல் போன்ற பட்டியல்களை மாநகராட்சி பெற்றுள்ளது. இந்தப் பட்டியலை தொழில் வரி செலுத்திய நிறுவனங்கள் பட்டியலுடன் ஒப்பிட்டு, வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இப்போது வங்கிகளில் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரி வசூலை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் மாநகராட்சி செயல்படும் என்றனர்.

கடந்த நிதியாண்டில் (2012-13) ரூ. 461.10 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ரூ. 221.04 கோடி தொழில் வரியும், ரூ. 8.73 கோடி வர்த்தக உரிமத் தொகையும், ரூ. 56 லட்சம் கம்பெனி வரியும் சென்னை மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்டுள்ளது.