Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சர்வர் பழுதால் வரி வசூல் பாதிப்பு

Print PDF
தினமலர்           04.04.2013

மாநகராட்சி சர்வர் பழுதால் வரி வசூல் பாதிப்பு


சேலம்: சேலம் மாநகராட்சியில் வரிவசூல் கணிணி மயமாக்கப்பட்ட நிலையில், சர்வர் பழுதடைந்ததால், வரி வசூல் பணி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வரி வசூலாத நிலையில், ஊழியர்களுக்கான சம்பளம் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கம்ப்யூட்டர், "சர்வர்' மூலம் நான்கு மண்டல அலுவலகமும் இணைக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் தலா, 15 வார்டுகளை உள்ளடக்கி, மொத்தம், 60 வார்டுகளில் வீடு, கடை, மனைகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, குத்தகை ஏலம், தொழில் வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு, மக்களுக்கான சாலை, சாக்கடை, கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வீடு, கடை நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், மாதம் தோறும், 10 லட்சம் ரூபாய் அளவில் வரிவசூல் செய்யப்படுகிறது. வாகனங்கள் மூலமாகவும், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் வரி வசூலிக்கப்பட்ட மண்டல அலுவலகங்களில் உள்ள பணம் கட்டப்படுகிறது.

கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால், அனைத்து வரவு, செலவு இனங்களும் கம்ப்யூட்டர் உதவியுடனே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், கம்ப்யூட்டர், "சர்வர்' பழுது அடைந்ததால், வரிவசூல் பணி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கம்ப்யூட்டர் பில்லிங் முறையில் வரிவசூல் ரசீது தரப்படுகிறது. சர்வர் பழுதால் வரி வசூலை நான்கு மண்டல அலுவலகங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வரி வசூல் பாதிப்பால் மாநகராட்சியில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், இதுவரை சம்பளம் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், புதியதாக வீடு கட்டுபவர்கள், மின் இணைப்பு பெறுபவர்கள், மனை விற்பனை செய்பவர்கள் உள்ளிட்டோர் பட்டா கேட்டும், குடிநீர், மின் இணைப்பு கேட்டும், வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தால், வரி முழுவதுமாக கட்டப்பட்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும். இதுபோன்ற சூழ்நிலையில் கம்ப்யூட்டர் சர்வர் பழுதால், வரி வசூல் பணி பாதிப்புக்கு உள்ளாகி, பொதுமக்களும், ஊழியர்களும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்த மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியதாவது:

சென்னையில் இருந்து இப்பொழுது தான் வந்தேன். கம்ப்யூடர் சர்வர் பழுது குறித்து தகவல் தெரியவில்லை. இதுசம்பந்தமாக விசாரித்து பதில் அளிக்கிறேன் என்றார்.

மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட கமிஷனர், ""இன்று (நேற்று) காலை, 11 மணிக்கு தான் சர்வர் பழுதாகி உள்ளது. மூன்று நாட்களாக சர்வர் பழுது என்பது தவறான தகவல். சர்வருக்கு செல்லும் ஒயர் எரிந்து விட்டதால், பழுதாகியுள்ளது. விரைந்து பழுது நீக்கப்பட்டு விடும் என்றார்.