Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்துவோரில் 50% பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர் .

Print PDF

தினமணி 17.09.2009

வரி செலுத்துவோரில் 50% பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர்.

மதுரை, செப். 16: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வரி செலுத்துவோரில் 50 சதவீதம் பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் வரி செலுத்துகின்றனர். ஆனால் 64 ஆயிரம் பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர்.

வரி செலுத்தும் அனைவருக்கும் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

90 சத வரி வசூல்: நகர் முழுவதும் 90 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுவிட்டது.

அரசுக் கட்டடங்கள் மூலம் மட்டுமே ரூ. 9 கோடி வரி நிலுவையில் இருந்தது. அதில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 1 கோடி வசூலிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள ரூ. 8 கோடி இம்மாத இறுதிக்குள் வசூலிக்கப்பட்டுவிடும்.

மத்திய அரசு நிதியுதவியுடன் மதுரை நகரில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிப்பறை வசதியின்றி 4,500 வீடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவருகிறது. கழிப்பறை வசதியில்லாத வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டு, கழிப்பறை கட்டப்படவுள்ளது.

இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஆணையர்.

தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல் கூறியது:

வைகை மாசடைவதை தடுக்க திட்டம்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களின் மூலம் வைகை நதி மாசடைவது தடுக்கப்படுகிறது.

மேலும், மதுரை வடபகுதியில் உள்ள பந்தல்குடி மற்றும் வண்டியூர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வைகையாற்றில் கலப்பதைத் தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேற்கண்ட இரு கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரைக் குழாய் மூலம் சக்கிமங்கலம் கழிவுநீரேற்று நிலையத்துக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் ரூ. 9.40 கோடியில் புதிய திட்டம் பொதுப்பணித் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்ததாரர் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நகரின் தென்பகுதியில் உள்ள அனுப்பானடி, சொட்டதட்டி, பனையூர், கிருதுமால், சிந்தாமணி, அவனியாபுரம் உள்ளிட்ட 7 கால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீரை ஏரிகளில் கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றார் .

Last Updated on Thursday, 17 September 2009 05:55