Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாகனம் நிறுத்த தானியங்கி கட்டண வசூல் வசதி அக்டோபர் 3-ல் அறிமுகம்

Print PDF

தினமணி 25.09.2009

வாகனம் நிறுத்த தானியங்கி கட்டண வசூல் வசதி அக்டோபர் 3-ல் அறிமுகம்

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி வாகன வசூல் பெட்டகம்.

சென்னை, செப். 24: வாகனம் நிறுத்தும் இடங்களை ஒழுங்குபடுத்தவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தானியங்கி வாகன வசூல் பெட்டகங்களை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமான இந்தத் திட்டம், அக்டோபர் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் பங்களிப்புடன் ""கட்டுதல், இயக்குதல் பின் ஒப்படைத்தல்'' என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் "மில்லினியம் சினர்ஜி' என்ற தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெர்மனியில் உள்ள "பார்கியோன்' என்ற நிறுவனத்திடமிருந்து இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பணியில் மில்லினியம் சினர்ஜி நிறுவனம் ஈடுபடும். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் தானியங்கி பெட்டகம் நன்கு இயங்கக் கூடிய நிலையில் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கும்.

சூரிய ஒளியில் இயங்கும்...

ரூ. 5 லட்சம் மதிப்புடைய இந்த இயந்திரம் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் திறன் கொண்டது. 15 வாகனங்களுக்கு ஒரு இயந்திரம் என்ற வீதத்தில் சாலையோரங்களில் அமைக்கப்படும்.

எங்கெங்கு அமைக்கப்படும்?

அதிக அளவில் கார்கள் நிறுத்தப்படும் மெரினா கடற்கரைப் பகுதி, மயிலாப்பூர் வடக்கு மாட வீதி, பாண்டிபஜார், தரமணி சி.எஸ்..ஆர். சாலை உள்பட 12 இடங்களில் 78 கருவிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மயிலாப்பூர் வடக்குமாட வீதி, பாண்டிபஜார், சி.எஸ்..ஆர். உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை முறையில் 17 கருவிகள் அமைக்கப்பட உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த பகுதிகளில் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

எப்படி செயல்படும்?

வாகன நிறுத்தும் இடங்களில் ஒப்பந்ததாரரின் ஊழியர் பணியமர்த்தப்படுவார். இவர் பொது மக்களுக்கு வாகனங்களை சீராக நிறுத்த உதவும் பணியில் ஈடுபடுவார். வாகன உரிமையாளர், ஐந்து ரூபாய் நாணயத்தை தானியங்கி பெட்டகத்தில் போட்டு சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

இந்தத் திட்டத்தின்படி குறிப்பிட்ட நிறுத்தும் இடத்தில் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதிக்கப்படும். ஒரு மணி நேரம் வரை ரூ. 5-ம், இரண்டு மணி நேரம் வரை ரூ. 10-ம், மூன்று மணி நேரம் வரை ரூ. 15-ம் கட்டணம் வசூலிக்கப்படும். ஒப்பந்தத்தின் படி வசூலாகும் தொகையில் 11.50 சதவீதம் சென்னை மாநகராட்சிக்கு இந்த நிறுவனம் அளித்துவிடும். மக்களின் வரவேற்பை பொருத்து மற்ற இடங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.