Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கட்டண பாக்கித் தொகைக்கான வட்டி ரத்து: அமைச்சர் சுரேஷ் குமார்

Print PDF

தினமணி 08.01.2010

குடிநீர் கட்டண பாக்கித் தொகைக்கான வட்டி ரத்து: அமைச்சர் சுரேஷ் குமார்

பெங்களூர், ஜன.7: மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டண பாக்கித் தொகை மீதான வட்டியை ரத்து செய்வது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று சட்டம் மற்றும் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள 7 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பாக அந்த நகரங்களில் ஆட்சித் தலைவர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வியாழக்கிழமை பெங்களூரில் இருந்தபடி விடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் சுரேஷ்குமார் உரையாடினார். அப்போது அடிப்படைக் கட்டமைப்புக்கு அரசு ஒதுக்கவுள்ள சிறப்பு நிதி ஒதுக்கீட்டுக்கான திட்டங்களை தயாரிக்கும்படி கூறினார்.

மேலும் நகர்ப் பகுதிகளில் குடிநீர் கட்டணம் அதிக அளவில் பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்த அவர் அவற்றை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அப்போது மைசூர், மங்களூர் போன்ற நகரங்களின் ஆட்சியர்கள் சில யோசனையை தெரிவித்தனர். குடிநீர் கட்டண பில் பாக்கித் தொகை அதிக அளவில் இருப்பதால் கட்டண வசூல் மிகவும் மந்தமாக உள்ளது. எனவே பில் பாக்கி மீதான வட்டியை ரத்து செய்தால் பாக்கித் தொகை எளிதாக வசூலாகிவிடும் என்று தெரிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் குடிநீர் கட்டண பாக்கித் தொகை மீதான வட்டியை ரத்து செய்வது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்றார். அமைச்சர் மேலும் கூறியதாவது: ஏழைகள் வீடு கட்ட வாங்கும் கடன் மீதான வட்டிக்கு சலுகை அளிக்கும் "நம்ம மனே' திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டப்படி ஆண்டு வருமானம் ரூ.30 ஆயிரத்திற்குள் இருக்கும் ஏழைகள் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கும்போது ரூ.1 லட்சம் வரையிலான கடனுக்கு உரிய வட்டியில் 5 சதவிகிதத்தை அரசே செலுத்தும். மீதி 3 சதவிகிதத்தை மட்டும் பலனாளிகள் செலுத்தினால் போதும்.

அதுபோல் ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளோர் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கும் முதல் ஒரு லட்சத்துக்கான வட்டியில் 5 சதவிகிதத்தை அரசே செலுத்தும். இந்தச் சலுகையை பெறத் தகுதியுடையபயனாளிகளிடமிருந்து மனுக்களை ஆட்சியர்கள் பெற வேண்டும். நடப்பு ஆண்டில் 2 லட்சம் பேர் நம்ம மனே திட்டத்தில் பயன்அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதுஎன்றார்.

Last Updated on Friday, 08 January 2010 10:27