Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலை நகரில் ரூ.2.25 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 12.01.2010

திருவண்ணாமலை நகரில் ரூ.2.25 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜன. 11: திருவண்ணாமலை நகராட்சிக்கு வரவேண்டிய ரூ.2.25 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறினார். ஓட்டல்கள், திருமண மண்டபங்களுக்கு சேவை வரி விதிப்பதை அந்தந்த நகராட்சிகளே முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் பெüர்ணமி கிரிவலத்தின்போது, மாதந்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் நகரில் குப்பைகள் பெருகும் நிலை உள்ளது. பக்தர்கள் அதிகம் பேர் வருவதால், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மூலம் சேரும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது.

இந்நிலையில் நகராட்சியின் வருவாயைப் பெருக்கும் வகையில் சேவை வரி விதிப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது.

கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் பேசியது: நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஓட்டல் தொழிலை நடத்தி வருகிறோம். ஆங்காங்கே கையேந்தி பவன்களும் அதிகரித்துவிட்டன. அவர்கள் மூலம் குப்பைகள் சேருகின்றன.அதேபோல் முக்கிய தெருக்களில் உள்ள நடைப்பாதைக் கடைகள் மூலம் குப்பைகள் சேருகின்றன. அவர்களுக்கும் நகராட்சி சார்பில் ஏதாவது கட்டணம் விதிக்க வேண்டும்.

நகராட்சி சேவை வரி விதிப்பு எங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருத்தல் வேண்டும். எங்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி பதில் கூறுகிறோம் என்றனர்.

தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் பேசியது: சேவை வரி விதிப்பது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன் ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்களுடன் கலந்து பேச வேண்டும் என்ற அடிப்படையில் இக்கூட்டம் நடக்கிறது.

நகராட்சியின் வருவாயைப் பெருக்குவே சேவை வரி விதிக்கப்படுகிறது. நடைப்பாதை கடைகளுக்கும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு வரிபாக்கி ரூ.2.25 கோடியாக உள்ளது.

அதை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரிபாக்கி வைத்துள்ள ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள் பட்டியல் சங்க நிர்வாகிகளிடம் தந்துள்ளோம். வரி பாக்கியை உடனே செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மயானத்தில் கட்டணமில்லா சேவை திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே உள்ள மயானத்தில் கட்டணமில்லா சேவையை தொடங்குவது குறித்து ஆலோசனை நடந்துவருகிறது. சென்னை மாநகராட்சியில் மயானத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதி தந்துள்ளது தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்.

திருவண்ணாமலை நகராட்சி மின்சார மயானம் மூன்சிட்டி ரோட்டரி சங்கம் வசம் தரப்பட்டுள்ளது. சிறிய பணிகள் நிலுவையில் உள்ளன என்றார் ஸ்ரீதரன்.

நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.செல்வம்,ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் மற்றும் ஓட்டல், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 12 January 2010 09:54