Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிவப்பு நிற சொத்து வரி புத்தகம் அமல்படுத்துமா மாநகராட்சி?

Print PDF

தினமலர் 16.01.2010

அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிவப்பு நிற சொத்து வரி புத்தகம் அமல்படுத்துமா மாநகராட்சி?

"கோவையில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை அடையாளப்படுத்திக் காட்டும் வகையில், சிவப்பு நிறத்திலான சொத்து வரி புத்தகம் வழங்க வேண்டும்' என்று, மாநகராட்சி நிர்வாகத்துக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் ஏராளமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சமீப காலமாக, ஐகோர்ட் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில், இத்தகைய கட்டடங்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.வணிக கட்டடங்களில் "பார்க்கிங்' மற்றும் அவசர வழிக்கான மாறுதல்களை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகமும், உள்ளூர் திட்டக் குழுமமும் இணைந்து முயற்சி எடுத்து வருகின்றன.

ஆனால், இதே காலகட்டத்தில் கோவை நகரில் அனுமதியற்ற "அபார்ட்மென்ட்' கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன.அனுமதியின்றி அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டும் பணியை அசுர வேகத்தில் மேற்கொண்டாலும் கூட, சில மாதங்களில் முடிக்க வாய்ப்பில்லை. பணி துவங்கி அஸ்திவாரம் போடும்போதே அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுக்கும், நகரமைப்புப் பிரிவு அலுவலர்களுக்கும் தெரிந்து விடும்.ஆனால், அவற்றை ஆரம்ப நிலையிலேயே தடுக்காமல், கட்டி முடிக்கும் வரை அனுமதித்து, அதற்கு ஈடாக பெரும் தொகையை லஞ்சமாக வாங்கி விடுவது வாடிக்கையாக நடக்கிறது. கட்டடம் கட்டி முடித்த பின், அதே கட்டடத்துக்கு சொத்து வரியும் விதித்து, குடிநீர் இணைப்பும் கொடுத்து விடுகின்றனர்.அனுமதியற்ற கட்டடம் என்பதை "100 சதவீதம் விதிகளுக்கு முரணான கட்டடம்' என்று பட்டியலிட்டு, அபராதம் மட்டும் வசூலிக்கின்றனர். அதையும், சொத்து வரி செலுத்துவதற்கான ரசீதில் மட்டுமே குறிக்கின்றனர். சொத்து வரி புத்தகத்தில் "அனுமதியற்ற கட்டடம்' குறித்து எந்தத் தகவலும் இருப்பதில்லை.இதனால், புரமோட்டர்கள் அரசையும், பொது மக்களையும் எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். அனுமதியற்ற கட்டடங்களுக்கு எதிராக, மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் இந்த காலகட்டத்திலும், ஆர்.எஸ்.புரத்தில் 50 வீடுகளை கொண்ட "அபார்ட்மென்ட்' அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது.

அனுமதியின்றி கட்டப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு இருந்தாலும், அதைத் தடுப்பதற்கான வாய்ப்பு, மாநகராட்சி நிர்வாகத்துக்கே அதிகம் உள்ளது. சொத்து வரி விதிப்பதில் சிறு மாற்றத்தைச் செய்தாலே இதைத்தடுக்க முடியும்.அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்ட துவங்கும் போது, அதற்கு ஒரே ஒரு உரிமையாளர் மட்டுமே இருப்பார். கட்டி முடித்த பின், வீடுகள் தனித்தனியாக விற்கப்படுவதால் அதற்கு பல உரிமையாளர்கள் உருவாகி விடுகின்றனர்.இந்த வீடுகளுக்கு தரப்படும் சொத்து வரி புத்தகத்தில், "அனுமதியற்ற கட்டடம்' என்பதற்கான அடையாளமே கிடையாது. இதனால், இந்த வீடுகளை வாங்கும் மக்களுக்கும், "அது அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம்; எதிர் காலத்தில் இடிக்கப்படவும் வாய்ப்புள்ளது' என்பது தெரிவதில்லை.சொத்து வரி புத்தகத்தின் அடிப்படையில், இந்த வீடுகளை வாங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், விபரம் தெரியாமல் கடன் கொடுத்து விடுவதுதான். விற்பவரின் பெயரில் பதிவான சொத்து மற்றும் சொத்து வரியை அடிப்படையாக வைத்து இந்த கடன் வழங்கப்படுகிறது.இதே சொத்து வரி ரசீதில், வரித்தொகை மற்றும் அபராதத் தொகை ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு பிரிவாக (காலம்) குறிப்பிட்டால், அனுமதியற்ற கட்டடம் என்பதைத் தெளிவு படுத்தலாம் என்ற யோசனையை கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.அனுமதியற்ற கட்டடம், விதிமீறிய கட்டடத்துக்கான சொத்து வரிப் புத்தகம் என்பதை, பார்த்த மாத்திரத்திலே தெரிந்து கொள்ளும் வகையில், சிவப்பு நிறத்தில் சொத்து வரி புத்தகம் தரலாம் என்பது இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன் தெரிவிக்கும் யோசனை. இது குறித்த விபரம் மாநகராட்சி கமிஷனருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
நமது நிருபர் -