Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலிமனைகளுக்கு வரி: இனாம்கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி 29.01.2010

காலிமனைகளுக்கு வரி: இனாம்கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

கரூர், ஜன. 28: காலிமனைகளுக்கு வரி விதிக்கும் தீர்மானம் இனாம்கரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இனாம்கரூர் நகராட்சியின் சாதாரணக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் வெ. கவிதா தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் ல. தங்கவேல், செயல் அலுவலர் வி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திருத்தத்தின் படி காலிமனை மீதான சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குடியிருப்புப் பகுதிகள் உள்ள தெருக்களிலுள்ள காலிமனைகள் "' மண்டலமாகவும், முக்கிய சாலைகள் மற்றும் பிரதான சாலைகளுக்கு இட்டுச்செல்லும் பேருந்து வழித்தட சாலைகள் அல்லாதவை "பி' மண்டலமாகவும், முக்கியச் சாலைகள் மற்றும் பிரதான சாலைகளுக்கு இட்டுச்செல்லும் பேருந்து வழித்தட சாலைகள் "சி' மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கு ஒரு சதுர அடிக்கு அரையாண்டுக்கு காலிமனை சொத்துவரியாக ஏ மண்டலத்துக்கு 10 பைசா, பி மண்டலத்துக்கு 15 பைசா, சி மண்டலத்துக்கு 20 பைசா வரி விதிக்கப்பட்டது.

மேலும், இனாம்கரூர் நகராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளிலும் பசுமை இயக்கத்தினர் மரக்கன்று நடுவதற்கு அனுமதி அளிப்பது.

நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்துவது, மக்களவை உறுப்பினர் தொகுதி உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சத்தில் 7 வார்டுகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துவது.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.10 லட்சத்தில் பெரியகுளத்துப்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறுக்கு மின்மோட்டார் பொருத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெங்கமேடு குடிநீர் தேக்கத் தொட்டி அருகே ரூ.1.25 லட்சத்தில் தங்கும் அறை கட்டுவது, நகராட்சி அலுவலக கட்டடத்தில் ஆர்.சி.சி. கட்டடம் அமைப்பதற்கு ரூ.9 லட்சம் அனுமதிப்பது, நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப்பணியில் நகராட்சியின் பங்குத் தொகையான ரூ.17.75 லட்சத்தில் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்வதற்கும் அனுமதி அளிப்பது உள்ளிட்ட 48 பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், உறுப்பினர்கள் ரா. கோபாலகிருஷ்ணன், க. ரவி, கு. ரேவதி, சே.ஜமுனா, ப. சகுந்தலா, செ. காமராஜ், கு. சம்பூர்ணம், த. காளியம்மாள், வி. கிரிவாசகன், பொ. சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.