Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர்க் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்த திட்டம்?

Print PDF

தினமணி 02.02.2010

கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர்க் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்த திட்டம்?

கடையநல்லூர், பிப். 1: கடையநல்லூர் நகராட்சியில் விரைவில் ரூ.21.41 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், குடிநீர்க் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்த நகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

52.25 சதுர கிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்துள்ள கடையநல்லூர் நகராட்சியில் 1973-ல் கடையநல்லூர் (கருப்பாநதி) குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1999- ல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத் திட்டங்களின் மூலம் 6 மேல்நிலை நீர்த்தொட்டிகள் மற்றும் ஒரு சம்ப்பினை (தேக்கி வைக்கும் தொட்டி) பயன்படுத்தி நகராட்சியிலுள்ள 12,283 வீட்டு இணைப்புகளுக்கும், 171 பொது நல்லிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு திட்டங்களின் மூலமும் சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அளவு தண்ணீர் கிடைக்காத நிலையில், நபர் ஒருவரின் பயன்பாட்டிற்கு நாளொன்றுக்கு வழங்க வேண்டிய சுமார் 90 லிட்டர் தண்ணீர்கூட பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர்அல்போன்ஸின் முயற்சியால் எதிர்கால கடையநல்லூர் நகராட்சியின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு புதிய குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தை 21.41 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், இத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனில் குடிநீர் முன்வைப்புத் தொகை மற்றும் குடிநீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் மற்றும் டி.என்.யு.டி.எப் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடிநீர் இணைப்பு முன்வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்த நகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது குடியிருப்பு உபயோகங்களுக்கான (வீடுகள்) குடிநீர் இணைப்புகளுக்கு முன்வைப்புத் தொகையாக ரூ.4000 பெறப்படுகிறது. இதனை ரூ.6000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது மாதம் ஒன்றுக்கு வசூலிக்கப்பட்டு வரும் குடிநீர்க் கட்டணம் ரூ.50, ரூ.100 ஆக உயர்த்த (அல்லது 1000 லிட்டருக்கு ரூ.10) முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குடியிருப்பு இல்லாத உபயோகங்களுக்கான குடிநீர் இணைப்பு முன்வைப்புத் தொகையை ரூ.8000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தவும், மாதந்திர குடிநீர்க் கட்டணத்தை ரூ.100-யிலிருந்து ரூ.200 ஆக உயர்த்தவும் (அல்லது 1000 லிட்டருக்கு ரூ.20) திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Last Updated on Tuesday, 02 February 2010 10:19