Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி விதிக்கு புறம்பாக வரி விதிப்பு?

Print PDF

தினமலர் 14.02.2010

மாநகராட்சி விதிக்கு புறம்பாக வரி விதிப்பு?

கோவை : காலியிட வரி செலுத்தாமல் தவிர்ப்பதற்காக, கட்டடம் கட்டி முடிப்பதற்கு முன்பே, விதிகளை மீறி வரி விதிப்பு மற்றும் குடிநீர் இணைப்பு கொடுத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.நிதியாண்டு முடியும் தருவாயில் இருப்பதால், கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் புதிய வரி விதிப்பு, வரி பாக்கி சூல் போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்நிலையில், கோவை கிழக்கு மண்டலத்தில், கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடி கட்டடத்திற்கு வரி விதிப்பு செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பும் தரப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட விவேகானந்தா நகரில் ஏழு சென்ட் காலி இடத்தில் 2 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு, கிழக்கு மண்டலத்தில் கட்டட வரைபட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த கட்டடம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால், டிச.2009லேயே வரி விதிப்பு செய்யப்பட்டு, 10 நாட்களுக்கு முன்பாக குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கட்டி முடிக்காத இந்த கட்டடத்துக்கு 2007-08லிருந்தே வரி விதிப்பு (அசெஸ்மென்ட் எண்;17076) செய்யப்பட்டு இருப்பது கூடுதல் செய்தி. இரு தளத்துக்கும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாய் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பித்துக் கட்டினாலும், குடிநீர் இணைப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்து விட்டே, கட்டடப் பணியைத் துவக்க வேண்டுமென்கிறது மாநகராட்சி விதி. புதிய கட்டடமாக இருந்தாலும் கட்டி முடித்த பின்பே, குடிநீர்க் குழாய் இணைப்பு தரப்படும். ஆனால், இந்த கட்டடத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டாக குடிநீர்க் குழாய் இணைப்பு தரப்பட்டு, அந்த தண்ணீரையே கட்டுமானப் பணிக்கும் பயன்படுத்துவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதே கிழக்கு மண்டலத்தில், கட்டி முடித்து பல மாதங்களான பல கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யப்படவில்லை. குடிநீர் இணைப்புக்கு பலர், பல மாதங்களாகக் காத்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்தாடுகிறது. கிழக்கு மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) லோகநாதனிடம் கேட்ட போது, ""அப்படி நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிடுவதைப் போல மாநகராட்சி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அலுவலக கோப்புகளை சரி பார்த்து அதன் பின்பே சொல்லமுடியும். இதற்கெல்லாம் உடனடியாக பதில் தர முடியாது,'' என்றார்.