Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி விதிப்பு குளறுபடிகளை நீக்க வேண்டும்

Print PDF

தினமணி 25.02.2010

வரி விதிப்பு குளறுபடிகளை நீக்க வேண்டும்

கரூர், பிப். 24: கரூர் நகராட்சி வரிவிதிப்பிலுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கரூர் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமையில் பெத்தாட்சி மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் (பொ) சி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்கள், கடைகள் ஆகியவற்றிற்கு 1999-2000-ம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையை செலுத்தாத கடைக்காரர்கள் மார்ச் 5-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாதபட்சத்தில், கடை உரிமத்தை ரத்து செய்து மறுஏலம் விடுவதற்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மன்றத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினர் வே. கதிரவன்: உறுப்பினர்கள் சொன்ன வேலையை செய்ததற்காக நகராட்சி ஊழியரை தாக்கிய அலுவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையர்: துறை ரீதியான நடவடிக்கையாக மெமோ வழங்கப்பட்டுள்ளது.

என். மணிராஜ்: வணிக நிறுவனங்களாக இருந்த பகுதிகள் குடியிருப்பாக மாற்றம் செய்யும் போது வரியைக் குறைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கடைப்பிடிக்காமல் குடியிருப்பு பகுதிகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கான வரி விதிக்கப்பட்டிருப்பதால் ஏராளமானவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையர்: நகராட்சித் தலைவர், அந்தந்த வார்டு உறுப்பினர்கள், வரிவிதிப்பு அலுவலர்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வரி மறுசீராய்வு செய்யப்பட்டு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிலுவையிலுள்ள வரிகள் வசூலிக்கப்படும்.

என். மணிராஜ்: நிலுவையிலுள்ள வரியை வசூலித்தால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வழங்குவார்கள். தவறாக விதிக்கப்பட்ட வரியை பொறுப்பு அலுவலர்களிடம் வசூலிக்கும் வகையில் பட்டியல் தயாரிக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே அவர்களிடம் வசூலிக்க வேண்டும்.

தலைவர்: பணியில் கவனக்குறைவாக இருந்தவர்களிடமிருந்து அதற்கான தொகையை

வசூலிக்கும் வகையில் வரி விதிப்பு பட்டியலை ஆணயைர் தயாரிக்க வேண்டும்.

வே. கதிரவன்: நகராட்சியின் வரிவிதிப்பில் குளறுபடி உள்ளது. எனவே, வீடுகள், வணிக பகுதிகளை மறுபடியும் அளந்து வரி விதிக்க வேண்டும். ரூ. 400 வரி கட்டியவருக்கு ரூ. 5 ஆயிரம் வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரி ஆய்வாளர் மாத்யுஜோசப்: ரூ. 4 ஆயிரம் பணம் கட்ட வேண்டியவருக்கு ரூ. 400 மட்டுமே கட்ட வேண்டுமென அலுவலர்கள் குறித்துக் கொடுத்துள்ளனர். எனவே, தற்போதுள்ள பாக்கியும் சேர்த்து கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவர்: வரி விதிப்பை வார்டு வாரியாகச் சென்று மறுபடியும் ஆய்வு நடத்த வேண்டும்.

வே. கதிரவன்: கரூர் நகராட்சிக்கு சொந்தமான நூலகங்கள் இயங்குகிறதா என்றே தெரியவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் க. சுப்பன், கி. வடிவேல், பி. சங்கர், ராஜகோபால், எம். மாரப்பன், கே. நல்லமுத்து, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 25 February 2010 11:02