Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை நகராட்சியில் வரி நிலுவை ரூ. 10 கோடி

Print PDF

தினமணி 04.03.2010

தஞ்சை நகராட்சியில் வரி நிலுவை ரூ. 10 கோடி

தஞ்சாவூர், மார்ச் 3: தஞ்சாவூர் நகராட்சியில் வரி நிலுவை ரூ. 10 கோடியை வசூல் செய்ய அனைத்து பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் நகராட்சி ஆணையர் த. நடராஜன்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் நகராட்சிக்கு வரி பாக்கியாக சொத்து வரியில் ரூ. 4.50 கோடி, குடிநீர் கட்டணத்தில் ரூ. 3.04 கோடி, வரியில்லா இனத்தின் கீழ் ரூ. 1.76 கோடி, தொழில் வரியாக ரூ. 1.06 கோடி நிலுவையில் உள்ளது.

இந்த நிலுவைத் தொகைகளை வசூல் செய்வதற்கு நகராட்சி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பணியாளர்கள் அனைவரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கடந்த ஒரு மாதமாக தீவிர வசூலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும், நகராட்சியின் மொத்த கேட்புத் தொகையில் 50 சதத்திற்கும் குறைவாகவே வசூல் செய்யப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டு (மார்ச் 2010) முடிவதற்கு இன்னும் சிலநாள்களே உள்ளதால் அதற்கு முன்னதாக 100 சதம் வசூல் செய்திடும்பொருட்டு வரி வசூலை தீவிரப்படுத்த முனைப்பு காட்டப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு அனைத்து வரி வசூல் மையங்களும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மற்றும் கணினி வசூல் மையங்களில் வரி வசூல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு நகராட்சிக்கு சேரவேண்டிய வரியினங்களை மார்ச் 31-ம் தேதிக்குள் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகராட்சி நிதிநிலை திருப்திகரமாக இல்லாததால், பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றிடும் நோக்கில் வரி வசூல் பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை வைப்புத் தொகை, வாடகை, உரிமக் கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும். வரி வசூல் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொறியாளர் காமராஜ், நகரமைப்பு அலுவலர் கோவிந்தசாமி, நகர்நல அலுவலர் அர்ஜுன்குமார், மேலாளர் ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் (பொ) சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 04 March 2010 09:49