Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வியாபார உரிமக் கட்டணத்தைக் குறைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி 19.03.2010

வியாபார உரிமக் கட்டணத்தைக் குறைக்க மாநகராட்சி முடிவு

சென்னை, மார்ச் 18: பல மடங்காக உயர்த்தப்பட்ட வியாபார உரிமக் கட்டணத்தை, குறைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்றவுடன் புதியக் கட்டண முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

சென்னை மாநகராட்சி வியாபார உரிமக்கட்டணமாக ரூ. 250, குப்பை வரி மற்றும் உணவுக் கட்டணமாக ரூ. 120 என மொத்தம் ரூ. 370 வியாபாரிகளிடம் இருந்து வசூலித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

அதாவது 1000 சதுர அடி வரையுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் ரூ. 2,000, குப்பை வரி மற்றும் உணவுக் கட்டணம் ரூ. 500 (உரிமக் கட்டணத்தில் 25 சதவீதம்) என மொத்தம் ரூ. 2,500 என நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சென்னையில் சில்லறை மளிகைக் கடைகள், மொத்த மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், சுய சேவை அங்காடிகள், டீக்கடைகள், ஓட்டல்கள், மாவு அரவை மையங்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

இவைகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் 500 சதுர அடிக்கும் குறைவான இடத்தில்தான் இயங்கி வருகின்றன. எனவே இந்தக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை சார்பில் மேயர் மா. சுப்பிரமணியத்திடம் கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உரிமக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக பேரவை நிர்வாகிகளிடம் மேயர் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அந்த நோட்டீஸில் உரிமக் கட்டணம் குறைப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

புதிய உரிமக் கட்டணம்... 500 சதுரஅடி வரை உள்ள கடைகளுக்கு ரூ. 500, 501 முதல் 1,000 சதுரஅடி வரையிலான கடைகளுக்கு ரூ. 750, 1,001 சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளுக்கு ரூ. 3,000 என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்த நோடீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. சொரூபன் கூறியது:

இந்தக் கட்டணக் குறைப்பு, வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியத்திடம் தொடர்ந்து வைத்த கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. இதற்கு மேயர் மற்றும் தமிழக அரசுக்கு அனைத்து வியாபாரிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதியக் கட்டணம் அமலுக்கு வருவது எப்போது என்று தெரியவில்லை. எனவே மார்ச் 31}ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமக் கட்டணத்துக்கு மே 31 வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

இதே போல் தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சி. நவமணி, சு. மங்களராஜன், எஸ். பெரியசாமி, வி.பி. மணி, ஜி.எஸ். கமால்பாஷா, ஜி. அய்யம் பெருமாள், ஜி. ரவிச்சந்திரன், . கருணாதங்கம், . முருகேசன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated on Friday, 19 March 2010 11:02