Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சி நகராட்சியில் வரி வசூல் தீவிரம்: 100 சதவீதம் வசூலிக்க இலக்கு

Print PDF

தினமலர் 24.03.2010

பொள்ளாச்சி நகராட்சியில் வரி வசூல் தீவிரம்: 100 சதவீதம் வசூலிக்க இலக்கு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 13வது வார்டில் சொத்துவரி 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பொள்ளாச்சியில் மொத்தம் 21,925 வரிவிதிப்பு இனங்கள் உள்ளன. நடப்பு ஆண்டுக்கு 4.80 கோடி ரூபாய் விரி விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியில் ஏற்கனவே 71.42 லட்சம் நிலுவையுள்ளது. குடிநீர் இணைப்புகள் 16,250 உள்ளது. குடிநீர் கட்டணமாக நடப்பு ஆண்டுக்கு 1.85 கோடி ரூபாயும், நிலுவை 24.25 லட்சம் ரூபாயும் உள்ளது. சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணத்தை நிலுவையின்றி முழுமையாக வசூலிக்க நகராட்சி நிர்வாகம் களமிறங்கியது. சொத்துவரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வீடு வீடாகவும், வணிக வளாக உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனால், கடந்த ஜன., முதல் சொத்துவரி, குடிநீர் கட்டணம் வசூலிப்பு தீவிரமானது. சொத்துவரி கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தினமும் 10 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் வரி வசூலாகி வருகிறது.

நிலுவையுள்ள சொத்துவரியில் 53.68 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு, 75.17 சதவீதம் வசூலாகியுள்ளது. நடப்பு ஆண்டு சொத்துவரியில் 4.19 கோடி ரூபாய் வசூலாகி, 87.4 சதவீதத்தை எட்டியுள்ளது. சொத்துவரி விதிப்பில் மொத்தத்தில் 85 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலும், நிலுவையுள்ள சொத்துவரியையும் முழுமையாக வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தில் நிலுவையிருந்த தொகையில் 11.04 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு, 45.54 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு குடிநீர் கட்டணத்தில் 1.45 கோடி ரூபாய் வசூலாகி, 78.4 சதவீதத்தை எட்டியுள்ளது.

நகராட்சியில் 280 குத்தகை இனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் 3.15 கோடி ரூபாய் வரி வசூலாக வேண்டும். அதில், நேற்றுவரை 257 கோடி ரூபாய் வசூலாகி, 81 சதவீதத்தை எட்டியுள்ளது. நகராட்சி குத்தகை இனங்கள், குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக வசூலிக்க வரிவசூல் பணியாளர்கள் வார்டு வாரியாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வரிவசூலில் சாதனை: நகராட்சி கமிஷனர் வரதராஜ் கூறுகையில், 'பொள்ளாச்சி நகராட்சி வருவாய் ஆய்வாளர் சீனிவாசனுக்கு வார்டு எண்கள் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,820 சொத்துவரி இனங்கள் உள்ளன. அதில், 2,660 சொத்துவரி இனங்களில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி கவுன்சிலாக இருக்கும் 13வது வார்டில் மொத்தம் 656 குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 8.5 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு, 100 சதவீதம் வரி வசூல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மூன்று வார்டுகளில் மொத்தம் 95 சதவீதம் வரிவசூலாகியுள்ளது. இதேபோன்று மற்ற வருவாய் ஆய்வாளர்கள் பொறுப்பில் உள்ள வார்டுகளிலும் 100 சதவீதம் வரிவசூலிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

Last Updated on Wednesday, 24 March 2010 08:07