Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சி ரூ.22 கோடி பற்றாக்குறை பட்ஜெட் குடிநீர் கட்டணம் உயர்த்த நடவடிக்கை

Print PDF

தினமலர் 30.03.2010

ஈரோடு மாநகராட்சி ரூ.22 கோடி பற்றாக்குறை பட்ஜெட் குடிநீர் கட்டணம் உயர்த்த நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் மூன்றாவது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 22 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் குமார்முருகேஸ் தாக்கல் செய்தார். பற்றாக்குறையை ஈடு செய்ய குடிநீர் கட்டணம், டிபாஸிட் தொகை உயர்த்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி 2010-11ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கூட்டம் 11.30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 12.10 மணிக்குதான் துவங்கியது. மேயர் நீண்ட நேரமாக தனது இருக்கையில் அமர்ந்திருந்தும், கூட்டம் தாமதமாகவே துவங்கியது. ஈரோடு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் குமார்முருகேஸ் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு வரும் நிதியாண்டின் மூன்று நிதிகளுக்குமான மொத்த வருவாய் 118 கோடியே 53 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய். மொத்த செலவு 140 கோடியே 57 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய். நிதி பற்றாக்குறை 22 கோடியே மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாய். சொத்துவரி: மொத்த வரிவிதிப்புகள் 23 ஆயிரத்து 212. நடப்பு நிதியாண்டில் இதுவரை 490 வரிவிதிப்புகள் கூடுதலாக விதிக்கப்பட்டு வருவாய் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2010-11ம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் கூடுதலாக வர வாய்ப்புள்ளது. நடப்பு நிதியாண்டில் சொத்துவரி வருவாய் மொத்தம் ஒன்பது கோடியே 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இதிலிருந்து வருவாய் நிதிக்கு மூன்று கோடியே 78 லட்சம் ரூபாய், குடிநீர் மற்றும் வடிகால் நிதிக்கு 3 கோடியே 40 லட்சம், ஆரம்ப கல்வி நிதிக்கு 1 கோடியே 51 லட்சத்து 12ம் ரூபாய் மற்றும் நூலக வரி கணக்குக்கு 71 லட்சத்து 8,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்வரி: மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர் மூலமாகவும் வரும் நிதியாண்டில் ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சொத்துக்கள் மூலம் வரவு: மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜ் சாலை வணிகவளாக கடைகள் 37, பஸ் ஸ்டாண்டில் உள்ள புதிய, பழைய வணிக வளாகம், மேற்குப்புறக் கடைகள் 178, வி.சி.டி.வி., சாலை, ஹெம்மிங்வே வணிக வளாக கடைகள், காவிரி சாலை வணிக வளாக கடைகள் மற்றும் லூம்வேர்ல்டு வணிக வளாக கடைகள் 146 என மொத்தம் 361 கடைகளின் மூலம் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

ஓராண்டு குத்தகை இனங்கள்: தினசரி, வார சந்தைகள், பஸ் ஸ்டாண்டு நுழைவு கட்டணம், 'டிவி' விளம்பரம், தங்கும் விடுதி, பொருள் பாதுகாப்பு அறை மற்றும் ஆடுவதை செய்யுமிடம் போன்ற ஓராண்டு குத்தகை இனங்கள் மூலம் இரண்டு கோடியே 9 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம் ஆகியன பொது ஏலம் மூலம் 35 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாநகராட்சி பகுதியில் பல்வேறு தொழில்கள் நடத்த வசூலிக்கப்படும் உரிமக்கட்டணம் மூலம் எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கம்ப்யூட்டர் சேவை மையம் மூலம் வரிவிதிப்பு, பெயர் மாற்றம், திருமண மண்டபம் ஒதுக்கீடு, பிறப்பு, இறப்பு சான்று, உரிமையாணை புதுப்பித்தல் மனு, வாடகை மதிப்பு சான்றிதழ், உணவு கலப்பட தடை சட்டம் கீழ் உரிமையாணை கோருவது போன்ற விண்ணப்பப் படிவங்கள் விற்பனை செய்வதன் மூலம் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

அரசு துறையினரால் வசூலிக்கப்பட்டு பின்னர் மாநகராட்சிக்கு அளிக்கப்படும் முத்திரைத்தாள் மிகுவரி மூலம் 28 லட்சம் மற்றும் கேளிக்கை வரி மூலம் 16 லட்சம் வருவாய் வர வாய்ப்புள்ளது. கடன்கள்: 'டுபிட்கோ' நிறுவனத்தாரிடமிருந்து பெற்ற கடனுக்கு அசல், வட்டி இரண்டு கோடியே 39 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய், டி.என்.யூ.டி.பி., நிறுவனத்துக்கு அசல், வட்டி ஒரு கோடியே 52 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 'டுபிட்கோ' நிறுவனத்திடமிருந்து குடிநீர் திட்டப்பணிக்காக பெறப்பட்ட கடன் தொகைக்கு ஐந்து லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். பற்றாக்குறை ஈடு செய்தல்: வரும் நிதியாண்டுக்கு வருவாய் நிதியில் 22 கோடியே மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் பொருட்டு, .டி.எஸ்.எம்.டி., திட்டத்தின் கீழ் 'டுபிட்கோ' நிறுவனத்திடமிருந்து கடன் பெற்று நேதாஜி சாலை (பழைய டவுன் பள்ளி) வணிக வளாகத்தில் 64 கடைகளும், ஆர்.கே.வி., சாலை தினசரி அங்காடியில் 90 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டு ஏல நடவடிக்கையில் உள்ளது. ஏலம் மூலம் மூன்று கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பற்றாக்குறையை ஈடு செய்ய அரசு மான்யங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் நிதி பற்றாக்குறை ஒரு கோடியே 92 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய். பற்றாக்குறையை ஈடுசெய்ய குடிநீர் கட்டணத்தை உயர்த்தவும், புதிதாக வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 30 March 2010 09:20