Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சி சொத்து வரி விதிக்க இடைக்கால தடை

Print PDF

தினகரன்     03.02.2011

கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சி சொத்து வரி விதிக்க இடைக்கால தடை

சென்னை, பிப்.3:

கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சிகள் சொத்து வரி விதிக்க, ஐகோர்ட் தடை விதித்தது.

பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து பொறியியல் கல்லூரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று விசாரித்தார். மனுதாரர் சார்பாக ஆஜரான வக்கீல் கே.செல்வராஜ், ‘‘நகராட்சி சட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகள் விதித்த சொத்து வரிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சிகள் சொத்து வரி விதிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

இதை ஏற்ற நீதிபதி, கல்வி நிறுவனங்களுக்கு பேரூராட்சிகள் சொத்து வரி விதிக்க இடைக்கால தடை விதித்தார்.

 

சொத்துவரி வசூல் ரசீது: தபாலில் அனுப்ப திட்டம்

Print PDF

தினமலர்         20.01.2011

சொத்துவரி வசூல் ரசீது: தபாலில் அனுப்ப திட்டம்

சென்னை : "சென்னை மாநகராட்சியில், கையடக்க கருவி மூலம் வசூலிக்கப்படும் சொத்து வரி விவரங்கள் அடங்கிய ரசீது, தபால் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று, கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.சென்னை மாநகராட்சியில், 155 வார்டுகளிலும் வரி வசூலிப்போர் வீடு வீடாகச் சென்று சொத்துவரி வசூல் செய்கின்றனர். இதன்மூலம், அதிக அளவு சொத்து வசூல் செய்யப்படுகிறது.

வரி வசூலிப்போரின் கையடக்க கருவியில், வரி வசூல் செய்வதற்கு ஆதாரமான, ரசீது தருவர்.மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில், நடத்துனர்கள் கொடுக்கும் பஸ் டிக்கெட் போல், சொத்துவரி கட்டியதற்கான ரசீது இருக்கும். கையடக்க கருவி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் உள்ள எழுத்துக்கள் இரண்டு, மூன்று நாட்களில் அழிந்து விடுவதால், சொத்து வரி கட்டியதற்கான ஆதாரமாக அந்த ரசீதை வைத்திருக்க முடியவில்லை.அதோடு சொத்து வரி கட்டியிருந்தாலும், மாநகராட்சியில் சரிவர கணக்கில் வைக்காமல், சொத்துவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதனால், சொத்து உரிமையாளர்கள் ஏராளமானோர் தினமும், மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து சரி பார்த்துச் செல்கின்றனர்.இது குறித்து, கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:கையடக்க கருவிகள் மூலம் வழங்கப்படும் சொத்து வரி ரசீது அழிந்து விடுவதால், சொத்து வரி செலுத்திய உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், கம்ப்யூட்டரில் பதிவு செய்து பணம் கட்டியதற்கான ரசீதை தபாலில் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர்கள் ஆன்-லைன் மூலம் தெரிந்து கொள்ள வசதியாக இணையதளத்திலும் வெளியிடப்படும். இரண்டு வார காலத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.நகரில், 150க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய உணவகங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். உணவகங்கள் செயல்படும் கட்டட உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தாமல் இருப்பதால், உணவகங்களின் உரிமையாளர்கள் உரிமம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, அதிகாரிகள் விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு கமிஷனர் கூறினார்.
 

பேரூராட்சி மூலம் வாகன வசூல்

Print PDF
தினமணி      04.01.2011

பேரூராட்சி மூலம் வாகன வசூல்

கொடுமுடி, ஜன. 3: கொடுமுடியில் கடந்த சில நாள்களாக பேரூராட்சிப் பணியாளர்கள் மூலம் வாகன நுழைவு வரி வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்ட கோயில் நகராகவும் திகழ்கிறது கொடுமுடி.

  இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க, பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்படுகிறது.

  கனரக வாகனங்களுக்கு ரூ. 25-ம், இலகு ரக வாகனங்களுக்கு ரூ. 10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் போலி ரசீதைக் கொண்டு, இலகுரக வாகனங்களுக்கு ரூ. 25 வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

  இது தொடர்பாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இருவரை போலீசார் கைது செய்தனர்.

  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமையில், அதிமுக, இந்திய கம்யூ. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார்  தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து கடந்த வாரம், மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா, கொடுமுடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதையறிந்த ஆட்சியர், ஏலதாரரின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

  இதனைத் தொடர்ந்து, பேரூராட்சிப் பணியாளர்கள் வாகன வசூலில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டுள்ளனர்.

  இது தொடர்பாக பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறுகையில், கடந்த மாதம் கோயிலுக்கு காரில் வந்த பொழுது ரூ. 25 கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். ஆனால் தற்போது நியாயமான கட்டணத்தை கேட்டுப் பெறுகின்றனர். இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றார்.

  கொடுமுடியைச் சேர்ந்த பி.செல்லமுத்து கூறுகையில், முன்பெல்லாம் கொடுமுடியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வரும்போதுகூட, ஏலதாரர்கள் வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக தினமணி மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
 


Page 36 of 148