Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

டிச.15-க்குள் வரி செலுத்த ராஜபாளையம் ஆணையர் உத்தரவு

Print PDF

தினமணி             08.12.2010

டிச.15-க்குள் வரி செலுத்த ராஜபாளையம் ஆணையர் உத்தரவு

ராஜபாளையம், டிச. 7: ராஜபாளையம் நகராட்சிக்குக் செலுத்த வேண்டிய வரிகளை டிச.15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் காளிமுத்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்திருப்பதாவது:

ராஜபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை தொகை, உரிமைக் கட்டணங்கள் அனைத்தையும் உடனே நகராட்சி அலுவலகத்தில் உள்ள வசூல் மையத்தில் கட்டி ரசீது பெற வேண்டும். டிச.15-ம் தேதிக்குள் கட்டத் தவறினால் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்

 

சுற்றுச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல்: ரத்துசெய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

Print PDF

தினமணி                08.12.2010

சுற்றுச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல்: ரத்துசெய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

மதுரை,டிச. 7: மதுரை உத்தங்குடி-கப்பலூர் சுற்றுச்சாலையில் வாகனங்களுக்கு மதுரை மாநகராட்சி சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்கக் கோரிய மனுக்களை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கச் செயலர், மதுரை மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் விவரம்:

மதுரை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்கும் வகையில் உத்தங்குடியிலிருந்து, கப்பலூர் வரையில் சுற்றுச்சாலை 29 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.47.35 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி அமைத்தது. இதற்கான செலவுத் தொகையை வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் மூலம் வசூலித்து ஈடுசெய்யவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு நகர்புற மேம்பட்டுத் திட்ட நிதியிலிருந்து கடனாக ரூ. 33.35 கோடியும், தமிழக அரசிடமிருந்து ரூ.14 கோடியும் சாலை அமைக்கப் பெறப்பட்டது.

இந் நிதிக்கான வட்டியும், சாலைப் பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப் போவதாகக் கூறப்பட்டது. சாலை 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.

தற்போது 10 ஆண்டுகளாக சுங்கம் வசூலிக்கப்படுகிறது. எனவே, சுங்கம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், மதுரை மாநகராட்சி சாலை அமைப்பதற்கு செலவான நிதியை 15 ஆண்டுகளுக்கு வசூலித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

 

ரிங்ரோட்டில் மாநகராட்சி டோல்கேட் வரி வசூலை எதிர்த்து மனுக்கள்

Print PDF

தினமலர்                    08.12.2010

ரிங்ரோட்டில் மாநகராட்சி டோல்கேட் வரி வசூலை எதிர்த்து மனுக்கள்

மதுரை: மதுரை ரிங் ரோட்டில் மாநகராட்சி நிர்வாகம் டோல்கேட் வரி வசூலிப்பதை நிறுத்த பஸ் உரிமையாளர்கள் சார்பில் தாக்கலான மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை, விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்கள்:மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பஸ்கள் ஏற்கனவே மதுரை மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை சென்றன. மதுரைக்குள் நெருக்கடியை தவிர்க்க மாட்டுத்தாவணிக்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டது. அங்கு பஸ்கள் செல்ல ரிங் ரோடு 47.35 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ரிங்ரோடு வழியாக 2000 நவ., 1 முதல் பஸ்கள் செல்ல உத்தரவிட்டது.

 ரிங்ரோட்டில் டோல்கேட் வரி வசூலிக்கும் உரிமையை மாநகராட்சிக்கு வழங்கியது. ரிங் ரோடு அமைக்கும் செலவு, அதை நிர்வாகிக்கும் செலவு, அதற்காகும் வட்டி ஆகியவை எட்டும் வரை ஐந்தாண்டுகளுக்கு வரி வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டது. அந்த தொகைகள் வரவான பின்னும், மாநகராட்சி டோல்கேட் வரி வசூலிக்கிறது. வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும். மேலும் 2005 நவ., 1 முதல் வசூலித்த தொகையை திருப்பி வழங்கவும் உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. இதற்கு மாநகராட்சி வக்கீல் எம்.ரவிசங்கர், அரசு வக்கீல் மனோகரன் ஆட்சேபம் தெரிவித்தனர்.மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் கோரிக்கையை பரிசீலிக்க போதிய காரணங்கள் இல்லை. அரசு உத்தரவில் மாநகராட்சி 15 ஆண்டுகளுக்கு வரி வசூலிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுக்கள் நிலைநிற்கத்தக்கது அல்ல, என குறிப்பிட்டார்.

 


Page 40 of 148