Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரிகள் செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை: கமிஷனர்

Print PDF

தினமலர் 14.10.2010

வரிகள் செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை: கமிஷனர்

திருவண்ணாமலை: "வந்தவாசி நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என நகராட்சி கமிஷனர் உசேன்பரூக்மன்னர் தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வந்தவாசி நகராட்சியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாயில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டிவனம் சாலையை இணைக்கும் புதிய சாலை 2 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. 75 லட்ச ரூபாயில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதே போன்று பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளதால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர், தொழில்வரி, நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை பாக்கிளை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக அளவில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் பெயர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வெளியில் வைக்கப்படும். இதனை தவிர்க்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிளை உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

அத்திக்கடவு 2வது திட்டம் பங்களிப்பு தொகை திரட்ட, பொதுமக்களிடம் டெபாசிட் வசூலிப்பு

Print PDF

தினமலர் 14.10.2010

அத்திக்கடவு 2வது திட்டம் பங்களிப்பு தொகை திரட்ட, பொதுமக்களிடம் டெபாசிட் வசூலிப்பு

பல்லடம்: அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு பங்களிப்பு தொகை தேவைப்படுவதால், பொதுமக்களிடம் "டெபாசிட்' பெறுவதில் நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. பல்லடம் நகராட்சியில் 3,507 குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிதாக குடிநீர் இணைப்பு கோருபவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று மாலை வரை 2,370 பேர், வங்கிகளில் "டெபாசிட்' செலுத்தி சீனியாரிட்டி எண் பெற்றுள்ளனர். தொடர்ந்து பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர். சீனியாரிட்டி அடிப்படையில், தினமும் 50 பேருக்கு, விதிமுறைப்படி, குடிநீர் குழாய் பொருத்திக் கொள்வதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் வழங்குகிறது. மெயின் குழாய் அருகே இணைப்பு இல்லாதவர்களுக்கு மெயின் குழாய் வரை நகராட்சி நிர்வாகமே குழாய் அமைத்துக் கொடுக்கிறது. உத்தரவு பெற்றவர்கள், குழாய்களை பிளம்பர்கள் மூலம் பொருத்தி விட்டு நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து, உடனடியாக அத்திக்கடவு மெயின் குழாயில் இருந்து இணைப்பு கொடுக்க உள்ளனர் .

நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:

தமிழக அரசு உத்தரவுப்படி, புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வீட்டு இணைப்புக்கு ரூ.7,000, வர்த்தக இணைப்புக்கு ரூ.10,000, தொழிற்சாலைக்கு ரூ.15 ஆயிரம் டெபாசிட் பெறப்படுகிறது. தற்போது தினமும் 18.50 லட்சம் லிட்டர் அத்திக்கடவு குடிநீர் வருகிறது. ஏழு மேல்நிலைத் தொட்டிகள் மூலம் மூன்று நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இரண்டு மணி நேரம் தண்ணீர் கிடைக்கிறது. புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டாலும், தற்போதுள்ள 18.50 லிட்டர் தண்ணீரே பழைய இணைப்புதாரர்கள் மற்றும் புதிய இணைப்புதாரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் முன்பு இரண்டு மணி நேரம் வந்த தண்ணீர் நேரம் மட்டுமே சிறிது குறையும். அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டம், துவங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவு பெறும். இத்திட்டம் நிறைவு பெற்றால் தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள ஏழு மேல்நிலை தொட்டிகளுடன் சி.டி.சி., காலனி, மேற்கு பல்லடம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தலா இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகளிலும் அத்திக்கடவு குடிநீர் ஏற்றப்பட்டு, வினியோகிக்கப்படும். இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு நகராட்சி பங்களிப்பு தொகை தேவைப்படுவதால் பொதுமக்களிடம் "டெபாசிட்' பெறுவதில் முனைப்பு காட்டி வருகிறோம்.இவ்வாறு, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

சித்தூர் மாவட்டத்தில் நகராட்சி வரி பாக்கிகளை உடனே வசூல் செய்யுங்கள் ராயலசீமா வட்டார இயக்குனர் உத்தரவு

Print PDF

தினகரன் 13.10.2010

சித்தூர் மாவட்டத்தில் நகராட்சி வரி பாக்கிகளை உடனே வசூல் செய்யுங்கள் ராயலசீமா வட்டார இயக்குனர் உத்தரவு

சித்தூர், அக்.13: சித்தூர் மாவட்டத்தில் நகராட்சி வரி பாக்கிகளை உடனே வசூல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ராயலசீமா நகராட்சி வட்டார இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சித்தூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று ராயலசீமா நகராட்சி வட்டார இயக்குனர் முரளி கிருஷ்ணாகவுட் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் முரளிகிருஷ்ணாகவுட் பேசியதாவது:

சித்தூர் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் அதிகாரிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் சொத்து வரி, குடிநீர்வரி போன்றவற்றை வசூல் செய்யவேண்டும். மேலும் நகராட்சி வளர்ச்சி பணிகள் தாமதமாகாமல் விரைவு படுத்த வேண்டும்.

வரி செலுத்தாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். அரசு நலத்திட்ட பணிகள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தவேண்டும். சிமென்ட் சாலைகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் தோண்டுதல், கால்வாய் அமைத்தல், தெருவிளக்குகள் போன்ற பணிகளுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் சித்தூர் நகராட்சி ஆணையாளர் எஸ்.எஸ்.வர்மா உட்பட மாவட்டத்தில் உள்ள திருப்பதி, நகரி, புத்தூர், பலமனேர், மதனப்பள்ளி, காளஹஸ்தி, புங்கனூர் உள்ளிட்ட நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 


Page 55 of 148