Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வீடு,வணிகம்,தொழிலுக்கு உயர்த்தப்பட்ட வரி வசூலிக்க அவினாசி பேரூராட்சிக்கு தடை

Print PDF

தினகரன் 07.09.2010

வீடு,வணிகம்,தொழிலுக்கு உயர்த்தப்பட்ட வரி வசூலிக்க அவினாசி பேரூராட்சிக்கு தடை

சென்னை, செப்.7: உயர்த்தப்பட்ட வீட்டு வரி, வணிகம் மற்றும் தொழில் வரி வசூலிக்க அவினாசி பேரூராட்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி நகர் மக்கள் நல மேம்பாட்டு சங்க தலைவர் விஜய் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி, வணிக வரி 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. வரி உயர்வு கடுமையாக இருந்தால், அதை குறைத்துக் கொள்ள அந்தந்த பேரூராட்சிகள் தீர்மானம் கொண்டு வரலாம் என்று தமிழக அரசு 2008ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அவினாசி பேரூராட்சியில் வரி குறைக்க தீர்மானம் போடப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுவரை வரி குறைப்பு தொடர்பாக, அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை. உயர்த்தப்பட்ட வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், அவினாசி பேரூராட்சி வரி வசூலிப்பில் பழைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நகராட்சி துறை செயலாளர், திருப்பூர் கலெக்டர், அவினாசி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

 

பாதாள சாக்கடைக்கு 3 ஆண்டு சேவைக்கட்டணம் 15 நாட்களுக்குள் செலுத்த மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமலர் 02.09.2010

பாதாள சாக்கடைக்கு 3 ஆண்டு சேவைக்கட்டணம் 15 நாட்களுக்குள் செலுத்த மாநகராட்சி நோட்டீஸ்

திருநெல்வேலி : நெல்லையில் பாதாள சாக்கடை சேவைக் கட்டணமாக 3 ஆண்டுக்குரிய தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாநகராட்சிப்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க மத்திய அரசில் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது நெல்லையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் ரூ.52.08 கோடி செலவில் அதிமுக ஆட்சியில் நெல்லையில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இணைப்புகள் பெற வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் டெபாசிட் பெறப்பட்டது. 18 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. பாதாள சாக்கடை இணைப்புக்களுக்காக மக்களிடம் டெபாசிட் பெறப்பட்ட பல பகுதிகளில் திட்டமே செயல்படுத்தப்படவில்லை. மேலும் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பதும் தடுக்கப்படவில்லை. நெல்லை ஜங்ஷன், நெல்லை டவுன், மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளில் சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கின்றன.

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பல வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை மெயின் குழாயில் இணைப்புகள் இணைக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே நெல்லை மாநகராட்சியில் இருந்து மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 3 ஆண்டுகளுக்குரிய பாதாள சாக்கடை சேவை கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாகவும், அதை 15 தினங்களுக்குள் செலுத்தவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு 40 ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்குரிய நிலுவைத் தொகையை மொத்தமாக செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு டெபாசிட் வசூலிக்கும் போது சேவைக் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது சொல்லப்படவில்லை. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் சேவைக் கட்டணம் சம்பந்தமாக மாநகராட்சியில் இருந்து பொதுமக்களுக்கு எந்தவித தகவலும் அனுப்பவில்லை. இந்நிலையில் நோட்டீசை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நோட்டீஸ் வரப்பெற்ற பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் பிரிவு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் நம்பி கூறுகையில், "பாதாள சாக்கடை திட்டத்திற்கு 3 ஆண்டு சேவைக் கட்டணமாக எனது வீட்டிற்கு ரூ.1120 செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இதுகுறித்த எந்த அறிவிப்பும் எனக்கு அனுப்பப்படவில்லை. இணைப்பு பெறும் போது நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தியுள்ளேன். பி.எஸ்.என்.எல்.போன்ற அரசு துறை நிறுவனங்களில் நுகர்வோரின் மாதாந்திர வட்டியை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் மாநகராட்சியில் டெபாசிட்டிற்கு எந்தவித வட்டியும் வழங்கப்படவில்லை. பாதாள சாக்கடை சேவை கட்டணமாக 40 ரூபாய் செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்துவரி அரையாண்டு கணக்கிலும், தண்ணீர் வரி காலாண்டு கணக்கிலும், பாதாள சாக்கடை சேவை கட்டணம் மாதக் கணக்கிலும் வசூலிக்கபடுவதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே இந்த சேவைக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்'.

 

தொழில் வரி செலுத்த மாநகராட்சி கெடு

Print PDF

தினமணி 31.08.2010

தொழில் வரி செலுத்த மாநகராட்சி கெடு

சென்னை, ஆக. 30: சென்னை மாநகராட்சியில் தொழில் வரி செலுத்துவோர் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் மத்திய, மாநில அரசு அலுவலர்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், நிறுவனங்கள், தனியார் விளம்பர நிறுவனங்கள், கம்பெனிகள், தொழில்புரிவோர், விற்பனை வரி செலுத்துவோர் என அனைவரும் 2010-11-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான தொழில் வரி மற்றும் நிலுவைகளை காசோலையாகவோ அல்லது கேட்பு வரைவோலையாகவோ (டி.டி.) "வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி' என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

உரிய காலத்துக்குள் தொழில் வரியினை செலுத்தத்தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதத் தொகையுடன் தொழில் வரி வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

 


Page 66 of 148