Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி தீவிரம் பங்களிப்பு தொகை, மாத கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினகரன் 24.08.2010

நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி தீவிரம் பங்களிப்பு தொகை, மாத கட்டணம் நிர்ணயம்

ஈரோடு, ஆக. 24: ஈரோடு மாநகராட்சி மற்றும் சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் நகராட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி மற்றும் நகராட்சி நிதியுடன், ஜெர்மன் நிதி ஆதாரத்துடன் சேர்த்து பொதுமக்கள் பங்களிப்பு தொகையையும் வசூலித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதன்படி பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சியுடன் மற்ற நகராட்சிகள் இணைந்த போதிலும் சூரம்பட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்ட அனுமதி அளித்தால் மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் சேர முடியும் என சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் கூறி விட்டது. இதனால் இதர பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கிய போதிலும் சூரம்பட்டி நகராட்சியில் மட்டும் பணிகள் துவங்காமல் இருந்தது. இந்நிலையில் சூரம்பட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதி அளித்ததால் தற்சமயம் சூரம்பட்டி நகராட்சியிலும் பொதுமக்களிடம் இருந்து பங்களிப்பு டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தற்சமயம் சூரம்பட்டி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இளங்கோ வீதி, கம்பர் வீதி போன்ற வீதிகளில் வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை ஒருங்கிணைத்து குழாய் மூலமாக கொண்டு செல்லும் வகையில் ஏற்கனவே உள்ள சாக்கடையுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோன்று, வீரப்பன்சத்திரம் நகராட்சியில் சி.என்.சி., கல்லூரி, பாப்பாத்திகாடு, சம்பத்நகர், மாணிக்கம்பாளையம் பகுதியிலும் பாதாள சாக்கடை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதே போன்று காசிபாளையம், பெரியசேமூர் நகராட்சி பகுதிகளிலும் பாதாள சாக்கடை கட்டும் பணிக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை பணிகளை செய்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக டெபாசிட் தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: பொதுமக்களிடம் இருந்து பங்களிப்பு தொகை வசூலிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு 500 சதுர அடி வரை டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரம், 500 முதல் 1200 சதுரஅடி வரை உள்ள வீடுகளுக்கு ரூ.7 ஆயிரம், 1200 முதல் 2400 சதுர அடி வரை ரூ.9 ஆயிரம், 2400 சதுர அடிக்கு மேல் ரூ.15 ஆயிரம் டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும்.

பாதாள சாக்கடை கட்டி முடித்த பிறகு ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் மாதந்தோறும் வாடகை கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி மாதாந்திர வாடகையாக 500 சதுரஅடிக்குள் உள்ளவர்களுக்கு ரூ. 70ம், 500 முதல் 1200 சதுரஅடி வரை ரூ. 100ம், 1200 முதல் முதல் 2400 சதுர அடி வரை ரூ.150, 2400 சதுர அடிக்கு மேல் இருந்தால் ரூ.200 வீதம் மாத வாடகை வசூலிக்கப்படும்.

வணிக நிறுவனங்களுக்கு 500 சதுரஅடி வரை ரூ.10 ஆயிரம், 500 முதல் 1200 சதுரஅடி வரை ரூ.21 ஆயிரம், 1200 முதல் முதல் 2400 சதுர அடி வரை ரூ.27 ஆயிரம், 2400 சதுர அடிக்கு மேல் இருந்தால் ரூ.75 ஆயிரம் டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும்.

அதேபோல வணிக நிறுவனங்களுக்கு மாதந்தோறும் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வாடகையாக 500 சதுரஅடிக்குள் உள்ளவர்களுக்கு ரூ.140, 500 முதல் 1200 சதுரஅடி வரை ரூ.300ம், 1200 முதல் முதல் 2400 சதுரஅடி வரை ரூ.450, 2400 சதுர அடிக்கு மேல் ரூ.1000 வீதம் மாத வாடகை வசூலிக்கப்படும். இதுதவிர சிறப்பு இணைப்புக்கு ரூ.1250 செலுத்த வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

வரிகளை செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு கட் : நெல்லை மண்டல உதவிக்கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 24.08.2010

வரிகளை செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு கட் : நெல்லை மண்டல உதவிக்கமிஷனர் அறிவிப்பு

திருநெல்வேலி : வரிகளை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்கவேண்டும் என நெல்லை மண்டல உதவிக்கமிஷனர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை மண்டலப்பகுதியில் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை உரிய காலத்திற்குள் செலுத்த பலமுறை நினைவூட்டியும் நிலுவை தொகையினை செலுத்த தவரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகராட்சி வரிவசூலை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக பல இடங்களில் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்தவேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை மாநகராட்சி கம்ப்யூட்டர் பிரிவில் உடனே செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும். இல்லையேல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என உதவிக்கமிஷனர் சாந்தி அறிவித்துள்ளார்.

 

குடிநீர் கட்டணம்: குழப்பம் வேண்டாம்

Print PDF

தினமணி 19.08.2010

குடிநீர் கட்டணம்: குழப்பம் வேண்டாம்

ஆலங்குளம், ஆக. 18: ஆலங்குளம் பேரூராட்சியில், புதிய குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை குறித்து வெளியாகும் வதந்திகளால் பொதுமக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என அமைச்சர் பூங்கோதை கேட்டுக் கொண்டார்.

ஆலங்குளம் பேரூராட்சியில் புதிதாக வீட்டு குடிநீர் இணைப்புக்கு |8100 ஆக இருந்த வைப்புத்தொகையை ரூ|3 ஆயிரமாகக் குறைக்க தீர்மானிக்கப்பட்டு, அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருசிலர், |ரூ8100-க்கு வங்கி வரைவோலை எடுத்தால்தான் புதிய இணைப்பு வழங்கப்படும். அதுவே முன்னுரிமையாகவும் கருதப்படும் என வதந்திகளைப் பரப்பி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பலர் ரூ|8100-க்கு வங்கி வரைவோலை எடுத்தும் பேரூராட்சி மன்றத்திற்கு அனுப்பி வந்தனர். இதனால் பெருவாரியான மக்கள், கட்டணம் குறித்து குழப்பம் அடைந்தனர்.

இது குறித்து, அமைச்சர் பூங்கோதையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. செவ்வாய்க்கிழமை அமைச்சர் இது குறித்து கூறியதாவது:

வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். இதன் மூலம் ஆலங்குளத்திற்கு தேவையான அளவிற்கு வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இத் திட்டத்தின்கீழ், ஆலங்குளம் பகுதியில் வழங்கப்படும் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான வைப்புத்தொகையை |ரூ8100-லிருந்து ரூ|3 ஆயிரமாக குறைத்து அரசு உத்தரவு பிறப்பிக்க தேவையான முயற்சிகள் எடுத்து வருகிறேன். எனவே, ரூ|8100 கட்டினால்தான் குடிநீர் இணைப்பு என யாராவது வதந்திகளைப் பரப்பினால் அதை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். ரூ|3 ஆயிரம் வைப்புத்தொகையிலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

 


Page 69 of 148