Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வருவாயை பெருக்க 10 லட்சம் புதிய சொத்துகளுக்கு வரி விதிக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 18.08.2010

வருவாயை பெருக்க 10 லட்சம் புதிய சொத்துகளுக்கு வரி விதிக்க மாநகராட்சி திட்டம்

புதுடெல்லி, ஆக. 18: மாநகராட்சி வருவாயை பெருக்க 10 லட்சம் புதிய சொத்துகளுக்கு வரி விதிப்பது என நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது. இதனால், சொத்து வரி வசூல் மூலம் கூடுதல் நிதியை திரட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக மாநகராட்சி நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா, மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.மெஹ்ரா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிதியாண்டில் கூடுதலாக 10 லட்சம் சொத்துக்களை சொத்து வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான விரிவான செயல் திட்டமும் உருவாக்கப்பட்டது.

அதுபற்றி சந்தோலியா கூறுகையில், "ஏற்கனவே சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதோடு மட்டுமல்லாமல் ரூ.5 லட்சத்துக்கு மேல் சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ள 4,816 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் மெஹ்ரா கூறியதாவது:

இந்த நிதியாண்டில் கூடுதலாக 10 லட்சம் சொத்துக்களை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சொத்துகளை அடையாளம் காணுவதற்காக இந்திய நில அளவைத்துறை, மின் விநியோக நிறுவனங்கள், எம். டி.என்.எல். ஆகியவற்றிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களையும் பெற்றுள்ளோம். இதுதவிர, வீடு வீடாக மாநகராட்சி அலுவலர்களும் புதிய சொத்துகளை வரி விதிப்பின் கீழ் கொண்டு வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பட்டியல்களை, இப்போதுள்ள சொத்து வரிதாரர்கள் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்த்து ஒழுங்குபடுத்தப்படும். பிறகு, கம்ப்யூட்டரில் விவரங்கள் இணைக்கப்படும். இந்தப் பணிகள் இன்னும் 6 மாத காலத்துக்கு நடக்கும். ஒரு வருடத்துக்குள் எல்லா சொத்துக்களும் சொத்து வரி விதிப்பின் கீழ் முழுமையாக கொண்டு வரப்பட்டு விடும். இவ்வாறு மெஹ்ரா கூறினார்.

2009&2010ம் நிதியாண்டில் சொத்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 9,80,589 ஆக இருந்தது. அந்த ஆண்டில் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.1,050 கோடியாக இருந்தது. ஆனால், ரூ.1,410 கோடி வசூலானது.

 

தீர்ப்பாய தீர்ப்புக்கு மதிப்பே இல்லை வரியை குறைக்க மறுத்தது மாநகராட்சி

Print PDF

தினமலர் 18.08.2010

தீர்ப்பாய தீர்ப்புக்கு மதிப்பே இல்லை வரியை குறைக்க மறுத்தது மாநகராட்சி

கோவை : உயர்த்தி விதிக்கப்பட்ட வீட்டு வரியை குறைக்க, மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை மதிக்காமல், வீட்டு உரிமையாளரை அலைய வைக்கிறது மாநகராட்சி நிர்வாகம். கோவை நகரிலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் லட்சுமிமில் காலனி, வரிவிதிப்பு எண் 65728, கதவு எண் 99 ல், வசிப்பவர் சபாபதி. 1993 ம் ஆண்டு அவருடைய பழைய வீட்டு கட்டடத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வரிவிதிப்பு செய்தபோது, அதிக வரிவிதிப்பு செய்ததாக கூறி, மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட, கோவை மாநகராட்சி சொத்து வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2009 ம் ஆண்டு மார்ச், 24 அன்று, வரிவிதிக்கப்பட்ட 2,225 ரூபாயில், 115 ரூபாயை குறைத்து, 2,142 ரூபாயை வசூலிக்க உத்தரவு பிறப்பித்தது. இது வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரிவிதிப்பு தொகையை, எதிர்காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்தப்படும் வரியில் கழித்து சமன்செய்து கொள்ள உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து வரிக்குறைப்பு செய்ய சபாபதி 7 ஆண்டுகளாக மாநகராட்சி தலைமை அலுவலகம், கிழக்கு மண்டல அலுவலகம் என அலுவலகங்களுக்கு சென்று வலியுறுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்காமல், தீர்ப்பின் படி, வரிக்குறைப்பு செய்யாமல் இழுத்தடித்தனர்.

இது குறித்து பாதிப்புக்குள்ளான சபாபதி கூறியதாவது: கோவை மாநகராட்சி வரிவதிப்பு மேல்முறையீட்டு தீர்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் வரிக்குறைப்பு செய்யக்கோரி, மாநகராட்சி கமிஷனரை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன்.கிழக்கு மண்டல உதவிகமிஷனரை சந்தித்து தீர்ப்பாய நகலை கொடுத்து அதை அமல்படுத்த கோரிக்கை விடுத்தேன். ஆனால் வரிக்குறைப்பு செய்யவில்லை.

மாநகாரட்சி கமிஷனர், உதவி கமிஷனர், வரிவிதிப்பு அலுவலர் என்று ஒவ்வொருவரையும் சந்தித்து இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டினேன். அதிகாரிகளோ பணியாளர்களோ கண்டு கொள்ளவில்லை. 113 ரூபாய் ஒரு போதும் குறைக்க முடியாது என மறுத்து விட்டனர். எப்படியும் தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஐகோர்ட்டில் நீதி கேட்பேன்.இவ்வாறு சபாபதி கூறினார்.

 

குடிநீர் இணைப்புக்கு கூடுதல் டெபாசிட் தொகை

Print PDF

தினமணி 17.08.2010

குடிநீர் இணைப்புக்கு கூடுதல் டெபாசிட் தொகை

சிதம்பரம், ஆக.16: சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு கூடுதல் டெபாசிட் தொகை பெறுவது குறித்து தீர்மானத்தை கண்டித்து அதிமுக, மதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் ஜி.மணிவேல் பேசுகையில் வீட்டு உபயோகத்துக்கான குடிநீர் இணைப்பு டெபாசிட் உயர்த்துவதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்தார்.

அதன் பின்னர் அதிமுக மற்றும் மதிமுகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசிய விபரம் வருமாறு:

.ரமேஷ் (பாமக)- குடிநீர் சரியாக கொடுக்க முடியாத நிலையில் இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவது சாத்தியமாகாது. திருமண மண்டபம், தங்கும் விடுதிகளுக்கு கூடுதல் டெபாசிட் தொகை பெறலாம்.

வீட்டு உபோயகத்துக்கான குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகையை உயர்த்துவதை கைவிட வேண்டும்.

.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக)- வீட்டு உயோக குடிநீர் இணைப்புகள் 5381 உள்ளன என தவறான புள்ளிவிவரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இணைப்பு பெற்றவர்களிடம் டெபாசிட் தொகையை உயர்த்தி வாங்கக் கூடாது. இனிவரும் காலங்களில் புதிதாக இணைப்பு கோருபவர்களிடம் கூடுதல் டெபாசிட் தொகையை வசூலிக்கலாம்.

அப்புசந்திரசேகர் (திமுக)- | 7.50 கோடி செலவிலான புதிய குடிநீர் திட்டத்துக்கு பொதுமக்களை பாதிக்காத வகையில் நிறைவேற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பை அளிப்போம்.

வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக)- நகரின் அனைத்து கழிவுநீரும் எனது வார்டு வழியாக பஸ்நிலையம் அருகில் உள்ள ஆற்றில் கலக்கிறது. மழைகாலம் வருவதால் எனது வார்டில் உள்ள வடிகால்களை தூர்வார வேண்டும்.

மேம்பாலம் அருகே உள்ள இலவச பொது கழிப்பறையில் தனியார் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதால் அந்த கழிப்பறையை தாற்காலிகமாக மூட வேண்டும்.

.ஆர்.சி.மணி (திமுக)- தெற்குரத வீதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே தனியார் வணிக நிறுவனங்களால் குப்பைகள் கொட்டப்பட்டு பகல் 11 மணிக்கு அள்ளப்படுகிறது.

பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இது குறித்து தினமணியில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சிதம்பரம் நகரில் 4 வீதிகள், பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் இருவேளையும் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க அப்பணியை தற்போது தாற்காலிகமாக நியமிக்கபபட்டுள்ள 30 துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

 


Page 70 of 148