Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

கட்டட வரி நிர்ணயத்ததில் வரி ஏய்ப்பு

Print PDF

தினமலர் 17.08.2010

கட்டட வரி நிர்ணயத்ததில் வரி ஏய்ப்பு

உடுமலை: உடுமலை நகராட்சியிலுள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாகவும், 30 சதவீதம் வரை இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, மறு ஆய்வு செய்ய நகராட்சி கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியும் பயனில்லை.உடுமலை நகராட்சியில், 13,179 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டு; வசூலிக் கப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள் உட்பட 210 கடைகளுக்கு 4.31 லட்சம் ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 16 தொழிற்சாலைகளுக்கு 62 ஆயிரமும், நகராட்சியிலுள்ள 1,294 காலியிடங்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு சதுர அடிக்கு குறிப்பிட்ட அளவு தொகை நிர்ணயித்து, மொத்த சதுர அடி பரப்பளவின் அடிப்படையில் கட்டடங்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.உடுமலை நகராட்சியிலுள்ள வீடுகளுக்கு வரி நிர்ணயிக்கும் அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட நபர்களிடம் குறிப்பிட்ட அளவு தொகை பெற்றுக்கொண்டு, குறைந்த அளவு பரப்பளவு என குறிப்பிட்டு வரி நிர்ணயித்துள்ளனர்.பெரும்பாலான வணிக வளாகங்களிலும் இதே போல் பரப்பளவு குறைத்து குறிப்பிடப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில வீடுகளில் பல ஆயிரக்கணக்கான சதுர அடி பரப்பளவு இருந்தாலும், குறைந்த சதுர அடி பரப்பளவு மட்டுமே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.அதே போல், வணிக வளாகங்களிலும், கடைகள் மறைக்கப்பட்டு, சதுர அடி பரப் பளவு குறைந்து கணக்கிடப்பட்டு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில வணிக வளாகங்களில், மூன்றடுக்குகளில் கடைகள் இருந்தாலும், இரண்டு அடுக்கு மட்டுமே உள்ளதாகவும், பல கடைகள் மறைத்தும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆண்டு தோறும் அதிகளவு வரி கட்டுவதற்கு பதில், கணக்கெடுக்கும் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகை கொடுத்தால் போதும் என்ற நிலையில், இவ்வாறான முறைகேடுகள் நடந் துள்ளன. அதே போல், அதிகாரிகளுக்கு ஒத்து வராத உரிமையாளர்களின் சிறிய அளவிலான வீடுகளுக்கு அதிகளவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, உடுமலை நகராட்சி பகுதியில் தற்போதுள்ள கட்டடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில் 30 சதவீதம் வரை வரி ஏய்ப்பு இருக்கும் வாய்ப்புள்ளதாகவும், நகராட்சிக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.இதனையடுத்து, மறு சீராய்வு செய்து, பாரபட்சம் இல்லாமல் வரி நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், இது குறித்து அறிக்கையை நகர மன்றத்தின் பார்வைக்கு வைக்க வேண்டும் என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வரி மறு சீராய்வு குறித்து தொடர் நடவடிக்கை இல்லாமல், வரி ஏய்ப்பு தொடர்கதையாக உள்ளது.இது குறித்து நகராட்சி தலைவர் வேலுசாமி கூறியதாவது :வரி ஏய்ப்பு காரணமாக, நகராட்சி வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் வந்தது.

இதனையடுத்து, அனைத்து கட்டடங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், இருக்கும் அளவை முறையாக அளவீடு செய்து, வரி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மறு அளவீடு செய்து நகர மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் கூறுகையில், ""வரி மறு ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. நகராட்சி நிர்வாக ஆணையரிடம் மறு ஆய்வு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என்றார்.

 

வரியில்லா இனங்கள் மூலம் வரவேண்டிய நிலுவை தொகையை வசூலிக்க பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவு

Print PDF

தினகரன் 16.08.2010

வரியில்லா இனங்கள் மூலம் வரவேண்டிய நிலுவை தொகையை வசூலிக்க பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவு

விழுப்புரம், ஆக. 16: விழுப்புரம் மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் பழனிசாமி முன்னிலையில் பேரூராட்சிகளின் இயக்குனர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

செஞ்சி, திருக்கோவிலூர், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் நடப்பு நிதியாண்டில் (2010&11) அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள அனைத்து பணிகளும் வரும் 22ம் தேதிக்குள் வேலைக்கான பணி ஆணை வழங்கி பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் உரம் தயார் செய்து விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் பேரூராட்சிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து திட்டப்பணிகளையும் கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். சுவர்ண ஜெயந்தித்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய தனி நபர் கடன்கள், குழுக்கடன்கள் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை பேரில் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

பொதுமக்கள் கேபிள் கட்டணம் செலுத்த வேண்டாம்

Print PDF

தினமணி 13.08.2010

பொதுமக்கள் கேபிள் கட்டணம் செலுத்த வேண்டாம்

காரைக்கால், ஆக. 12 : காரைக்கால் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியை செலுத்தாததால், வாடிக்கையாளர்கள் கேபிள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று காரைக்கால் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காரைக்கால் நகர்மன்றக் கூட்டத்தின் 28வது கூட்டம் தலைவர் ஆர். பிரபாவதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த பல கூட்டங்கள் சுமூகமாக நடக்காததால், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளதாகவும், உறுப்பினர்கள் சுமூகமாக பேசி கூட்டத்தை நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாத விவரம்:

செய்யது அகமது, கார்த்திகேசன், வி.. அம்புரோஸ்: காரைக்காலில் கே.எல். டிவி என்ற தனியார் கேபிள் ஆபரேட்டர் நிறுவனம், நகராட்சிக்கு | 88 லட்சம் கேளிக்கை வரி பாக்கி செலுத்தாமல் இருந்த நிலையில், அந்த நிறுவனத்தை டைமண்ட் டி.வி. என்று பெயர் மாற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வாறு அனுமதி அளித்தது.

தற்போது அந்த கேபிள் நிறுவனம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வரி பாக்கி செலுத்தாமல் இருப்பதால், அதுகுறித்து நகராட்சியின் நடவடிக்கை என்ன? என்றனர்.

இதையடுத்து, கேளிக்கை வரி செலுத்தாததால், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் செலுத்தும் கேபிள் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஆணையர் முறையான அறிவிப்பு வெளியிட உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

காரைக்காலில் மதகடி, காதல்சுல்தான், பி.கே.சாலை வார்டு குப்பை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்காலில் வாரச் சந்தையை மன்றத்தின் ஒப்புதலின்றி இடம் மாற்றியதாகவும், தாற்காலிக மார்க்கெட் வளாகம் உரிய வசதிகளின்றி அமைக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி தர மன்றம் ஒப்புதல் அளித்தது. ஆடு அறுக்கும் கட்டணத்தை உயர்த்தியும், நகரில் முறையான குடிநீர் விநியோகம், மின்விளக்குகள் சீரமைப்பது, விளம்பரத்துடன் கூடிய நிழற்குடை அமைக்க அனுமதி என 34 பணிகளுக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்ற துணைத் தலைவர் இ. தங்கவடிவேல், ஆணையர் ஜோஸ்பேட்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உறுப்பினர்களுடன் அமர்ந்த துணைத் தலைவர்: கூட்டத்தில் வழக்கமாக, தலைவர், துணைத் தலைவர், ஆணையர் ஆகியோர் மன்றத்தின் மையப் பகுதி இருக்கையில் அமர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

திமுகவை சேர்ந்த தலைவர் பிரபாவதிக்கும், காங்கிரûஸ சேர்ந்த துணைத் தலைவர் தங்கவடிவேலுக்கும் அண்மை காலமாக இணக்கமான உறவு இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து துணைத் தலைவர் அமர்ந்து, கேள்விகள் எழுப்பினார்.

 


Page 71 of 148