Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி அதிகாரி தகவல் பண்ணை வீடுகளில் திருமணம் கட்டணம் ரூ.25,000 ஆக உயர்வு

Print PDF

தினகரன் 22.06.2010

மாநகராட்சி அதிகாரி தகவல் பண்ணை வீடுகளில் திருமணம் கட்டணம் ரூ.25,000 ஆக உயர்வு

புதுடெல்லி, ஜூன் 22:பண்ணை வீடுகளில் திருமணம் நடத்த தினசரி கட்டணம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்லியில் தனியாரு க்கு சொந்தமான பண் ணை வீடுகள் உள்ளன. இவற்றில் திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதற்காக பண்ணை வீட்டு சொந்தக்காரர்கள் தினசரி வாடகையாக லட்சக்கணக்கில் வசூலிக்கின்றனர். வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பண்ணை வீடுகளிடம் இருந்து மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பண்ணை வீடுகளுக்கான கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.

இதுபற்றி மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தனியார் பண்ணை வீடுகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது 5 ஏக்கர் பரப்பளவுடன் கூடிய பண்ணை வீடுகளுக்கு நாளொன்றுக்கு 20,000 ரூபாயும், 5 ஏக்கருக்கும் குறைவான பண்ணை வீடுகளுக்கு நாளொன்றுக்கு 10,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இனிமேல் 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான பரப்பளவில் அமைந்துள்ள பண்னை வீட்டுக்கு நாளொ ன்றுக்கு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படும். அதற்கு மேல் 5 ஏக்கர் வரையிலான பண்ணை வீடுகளுக்கு நாளொன்றுக்கு கட்டணமாக ரூ.50,000 வசூலிக்கப்படும். அதேபோல 5 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட பண்ணை வீடுகளுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ.1 லட்சம் வசூலிக்கப்படும்.

இந்த பண்ணை வீடுகள் அனைத்தும் மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும். இவற்றில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். அப்போது காதைப் பிளக்கும்படி ஒலிபெருக்கி வைக்கக் கூடாது. பண்ணை வீட்டின் எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே அரசு அனுமதி பெற்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.

மாப்பிள்ளை அழைப்புக்காக குதிரை சாரட் மற்றும் ஊர்வலங்களை சாலையில் நடத்த அனுமதி இல்லை. பண்ணை வீடுகளில் வாகனங்களை நிறுத்த முறையான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும்.

அத்துடன் வாகனங்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் தனித்தனியாக இரு வழிகளை அமைத்து இருக்க வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பண்ணை வீட்டு அதிபரே செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க முடியாது.

இவற்றில் ஆண்டுக்கு 120 நிகழ்ச்சிகள் நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரே நாளில் 2 நிகழ்ச்சிகள் நடத்தப்படுமானால் அதற்காக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.

 

ஈரோடு மாநகராட்சி தொழில் வரியைக் குறைக்க தொழில்-வணிக சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

Print PDF

தினமணி 21.06.2010

ஈரோடு மாநகராட்சி தொழில் வரியைக் குறைக்க தொழில்-வணிக சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 20: ஈரோடு மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள தொழில் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பு சிறப்பு செயற்குழுக் கூட்டம், ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.கே.ராமசாமி, ஆர்.சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். பில்டர்ஸ் சங்கத் தலைவர் ஏ.ராமலிங்கம் வரவேற்றார். பொதுச்செயலர் டி.ஜெகதீசன், பொருளாளர் வி.கே.ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் பெற்றதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு மனித நேய கல்விக் காப்பாளர் விருது வழங்கப்பட்டது.

ஈரோடு பிரப் சாலையில் உள்ள 80 அடி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும். அரசு தலைமை மருத்துவமனை அருகில் மேம்பாலம் கட்ட வேண்டும்.

நூல் விலை தொடர்ந்து உயர்வதால், பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோர், தங்களது நிறுவனங்களுக்கு பழைய இயந்திரங்களை வாங்கியிருந்தாலும், அவர்களுக்கு மின் கட்டண மானியம் வழங்க வேண்டும். ஈரோட்டில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனி மார்க்கெட் வளாகத்தை ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகமாக மாற்ற வேண்டும். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறநகர் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

ஈரோடு நகராட்சியில் தொழில் வரி மிக அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் வரியை உடனடியாகக் குறைக்காவிட்டால், அடுத்த அரையாண்டிற்கான வரியை செலுத்த மறுக்கும் சூழல் உருவாகும். மேட்டூரில் இருந்து தனி குழாய் வழியாக குடிநீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். வஉசி பூங்காவில் உள்ள பழைய லாரி நிறுத்த வளாகத்தில், நிரந்தர தொழில் கண்காட்சி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

வரிச் செலுத்தாதவர்களுக்கு 30க்குள் நோட்டீஸ் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாநில அதிகாரி கெடு

Print PDF

தினமலர் 21.06.2010

வரிச் செலுத்தாதவர்களுக்கு 30க்குள் நோட்டீஸ் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாநில அதிகாரி கெடு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வரி முழுமையாக வசூல் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள் மூலம் சுமார் 4 கோடி ரூபாயிற்கு மேல் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரியினை விரைவாக செலுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் வலியுறுத்தி வருகிறார். வரியினை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலக கூடுதல் இயக்கநர் சந்திரசேகரன் தூத்துக்குடிக்கு வந்தார். பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் நடப்பதையும் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார். பின்னர் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் குறித்து முழுமையாக ஆய்வு செய்தார். அதிகமான வரிப்பாக்கி இருக்கிறது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் உள்ள வரிப் பாக்கிக்கு வரும் 30ம் தேதிக்குள் டிமாண்ட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.செப்டம்பர் 30ம் தேதிக்குள் முழுமையாக வரி வசூல் செய்து, எந்த ஒரு பாக்கியும் இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் இது சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 


Page 77 of 148