Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

திருச்சி மாநகராட்சி தீவிர வரி வசூல் முகாம்: பிப். 28-ம் தேதியுடன் முடிவடைகிறது

Print PDF

தினமணி 26.02.2010

திருச்சி மாநகராட்சி தீவிர வரி வசூல் முகாம்: பிப். 28-ம் தேதியுடன் முடிவடைகிறது

திருச்சி, பிப். 25: சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூலிக்கும் திருச்சி மாநகராட்சியின் தீவிர வரி வசூல் முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளதாக ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்யும் தீவிர வரி வசூல் முகாம் கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கென, பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களிலோ அல்லது தஞ்சாவூர் சாலை- அரியமங்கலம் வார்டு அலுவலகம், சுப்பிரமணியபுரம் வார்டு அலுவலகம், மேலக் கல்கண்டார்கோட்டை வார்டு அலுவலகம், விறகுப் பேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகம், கே.கே. நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்தி கோவில் தெரு வார்டு அலுவலகம், உறையூர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், எடமலைப்பட்டிபுதூர் சித்த மருத்துவகத் கட்டடம், தேவர் ஹால் ஆகிய இடங்களில் சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் தாங்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை வரிவசூல் முகாமின் இறுதி நாளான பிப். 28-ம் தேதிக்குள் செலுத்தி ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Friday, 26 February 2010 09:12
 

கடையநல்லூரில் வீட்டுவரி உயர்வு சென்னையில் 5ம் தேதி முகாந்திர கூட்டம்

Print PDF

தினமலர் 26.02.2010

கடையநல்லூரில் வீட்டுவரி உயர்வு சென்னையில் 5ம் தேதி முகாந்திர கூட்டம்

கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில் வீட்டுவரி உயர்த்தப்பட்டது தொடர்பாக சென்னையில் மார்ச் 5ம் தேதி சிறப்பு முகாந்திர கூட்டம் நடத்தப்படுவதாக பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.. தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் வரிநிர்ணயம் செய்யப்பட்ட போது சுமார் 500 குடியிருப்புகளுக்கு வீட்டு வரி உயர்வு பலமடங்குகளாக உயர்த்தப்பட்டதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்திட அதிகாரிகள் குழு கடையநல்லூர் பகுதிக்கு வருகை தந்தனர். இருந்த போதினும் பலமடங்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வினை மறுஆய்வு செய்ய வேண்டுமென முக்கிய அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து நிர்ணயத்தில் பாதிக்கப்படுவதாக கூறப்படும் குடியிருப்போர்களை கொண்ட முகாந்திர கூட்டம் நடத்திட துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையருடன் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர், நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் மார்ச் 5ம் தேதி சென்னையில் வரி நிர்ணயம் தொடர்பான சிறப்பு முகாந்திர கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் முன்னிலையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரி உயர்த்தப்பட்டதாக தெரிவித்து வரும் குடியிருப்போரும் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Friday, 26 February 2010 06:25
 

வரி விதிப்பு குளறுபடிகளை நீக்க வேண்டும்

Print PDF

தினமணி 25.02.2010

வரி விதிப்பு குளறுபடிகளை நீக்க வேண்டும்

கரூர், பிப். 24: கரூர் நகராட்சி வரிவிதிப்பிலுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கரூர் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமையில் பெத்தாட்சி மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் (பொ) சி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்கள், கடைகள் ஆகியவற்றிற்கு 1999-2000-ம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையை செலுத்தாத கடைக்காரர்கள் மார்ச் 5-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாதபட்சத்தில், கடை உரிமத்தை ரத்து செய்து மறுஏலம் விடுவதற்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மன்றத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினர் வே. கதிரவன்: உறுப்பினர்கள் சொன்ன வேலையை செய்ததற்காக நகராட்சி ஊழியரை தாக்கிய அலுவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையர்: துறை ரீதியான நடவடிக்கையாக மெமோ வழங்கப்பட்டுள்ளது.

என். மணிராஜ்: வணிக நிறுவனங்களாக இருந்த பகுதிகள் குடியிருப்பாக மாற்றம் செய்யும் போது வரியைக் குறைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கடைப்பிடிக்காமல் குடியிருப்பு பகுதிகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கான வரி விதிக்கப்பட்டிருப்பதால் ஏராளமானவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணையர்: நகராட்சித் தலைவர், அந்தந்த வார்டு உறுப்பினர்கள், வரிவிதிப்பு அலுவலர்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வரி மறுசீராய்வு செய்யப்பட்டு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிலுவையிலுள்ள வரிகள் வசூலிக்கப்படும்.

என். மணிராஜ்: நிலுவையிலுள்ள வரியை வசூலித்தால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வழங்குவார்கள். தவறாக விதிக்கப்பட்ட வரியை பொறுப்பு அலுவலர்களிடம் வசூலிக்கும் வகையில் பட்டியல் தயாரிக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே அவர்களிடம் வசூலிக்க வேண்டும்.

தலைவர்: பணியில் கவனக்குறைவாக இருந்தவர்களிடமிருந்து அதற்கான தொகையை

வசூலிக்கும் வகையில் வரி விதிப்பு பட்டியலை ஆணயைர் தயாரிக்க வேண்டும்.

வே. கதிரவன்: நகராட்சியின் வரிவிதிப்பில் குளறுபடி உள்ளது. எனவே, வீடுகள், வணிக பகுதிகளை மறுபடியும் அளந்து வரி விதிக்க வேண்டும். ரூ. 400 வரி கட்டியவருக்கு ரூ. 5 ஆயிரம் வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரி ஆய்வாளர் மாத்யுஜோசப்: ரூ. 4 ஆயிரம் பணம் கட்ட வேண்டியவருக்கு ரூ. 400 மட்டுமே கட்ட வேண்டுமென அலுவலர்கள் குறித்துக் கொடுத்துள்ளனர். எனவே, தற்போதுள்ள பாக்கியும் சேர்த்து கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவர்: வரி விதிப்பை வார்டு வாரியாகச் சென்று மறுபடியும் ஆய்வு நடத்த வேண்டும்.

வே. கதிரவன்: கரூர் நகராட்சிக்கு சொந்தமான நூலகங்கள் இயங்குகிறதா என்றே தெரியவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் க. சுப்பன், கி. வடிவேல், பி. சங்கர், ராஜகோபால், எம். மாரப்பன், கே. நல்லமுத்து, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 25 February 2010 11:02
 


Page 108 of 148