Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

திருவண்ணாமலை நகரில் ரூ.2.25 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 12.01.2010

திருவண்ணாமலை நகரில் ரூ.2.25 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜன. 11: திருவண்ணாமலை நகராட்சிக்கு வரவேண்டிய ரூ.2.25 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறினார். ஓட்டல்கள், திருமண மண்டபங்களுக்கு சேவை வரி விதிப்பதை அந்தந்த நகராட்சிகளே முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் பெüர்ணமி கிரிவலத்தின்போது, மாதந்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் நகரில் குப்பைகள் பெருகும் நிலை உள்ளது. பக்தர்கள் அதிகம் பேர் வருவதால், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மூலம் சேரும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது.

இந்நிலையில் நகராட்சியின் வருவாயைப் பெருக்கும் வகையில் சேவை வரி விதிப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது.

கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் பேசியது: நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஓட்டல் தொழிலை நடத்தி வருகிறோம். ஆங்காங்கே கையேந்தி பவன்களும் அதிகரித்துவிட்டன. அவர்கள் மூலம் குப்பைகள் சேருகின்றன.அதேபோல் முக்கிய தெருக்களில் உள்ள நடைப்பாதைக் கடைகள் மூலம் குப்பைகள் சேருகின்றன. அவர்களுக்கும் நகராட்சி சார்பில் ஏதாவது கட்டணம் விதிக்க வேண்டும்.

நகராட்சி சேவை வரி விதிப்பு எங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருத்தல் வேண்டும். எங்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி பதில் கூறுகிறோம் என்றனர்.

தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் பேசியது: சேவை வரி விதிப்பது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன் ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்களுடன் கலந்து பேச வேண்டும் என்ற அடிப்படையில் இக்கூட்டம் நடக்கிறது.

நகராட்சியின் வருவாயைப் பெருக்குவே சேவை வரி விதிக்கப்படுகிறது. நடைப்பாதை கடைகளுக்கும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு வரிபாக்கி ரூ.2.25 கோடியாக உள்ளது.

அதை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரிபாக்கி வைத்துள்ள ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள் பட்டியல் சங்க நிர்வாகிகளிடம் தந்துள்ளோம். வரி பாக்கியை உடனே செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மயானத்தில் கட்டணமில்லா சேவை திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே உள்ள மயானத்தில் கட்டணமில்லா சேவையை தொடங்குவது குறித்து ஆலோசனை நடந்துவருகிறது. சென்னை மாநகராட்சியில் மயானத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதி தந்துள்ளது தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்.

திருவண்ணாமலை நகராட்சி மின்சார மயானம் மூன்சிட்டி ரோட்டரி சங்கம் வசம் தரப்பட்டுள்ளது. சிறிய பணிகள் நிலுவையில் உள்ளன என்றார் ஸ்ரீதரன்.

நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.செல்வம்,ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் மற்றும் ஓட்டல், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 12 January 2010 09:54
 

குடிநீர் கட்டண பாக்கித் தொகைக்கான வட்டி ரத்து: அமைச்சர் சுரேஷ் குமார்

Print PDF

தினமணி 08.01.2010

குடிநீர் கட்டண பாக்கித் தொகைக்கான வட்டி ரத்து: அமைச்சர் சுரேஷ் குமார்

பெங்களூர், ஜன.7: மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டண பாக்கித் தொகை மீதான வட்டியை ரத்து செய்வது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று சட்டம் மற்றும் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள 7 மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பாக அந்த நகரங்களில் ஆட்சித் தலைவர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வியாழக்கிழமை பெங்களூரில் இருந்தபடி விடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் சுரேஷ்குமார் உரையாடினார். அப்போது அடிப்படைக் கட்டமைப்புக்கு அரசு ஒதுக்கவுள்ள சிறப்பு நிதி ஒதுக்கீட்டுக்கான திட்டங்களை தயாரிக்கும்படி கூறினார்.

மேலும் நகர்ப் பகுதிகளில் குடிநீர் கட்டணம் அதிக அளவில் பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்த அவர் அவற்றை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அப்போது மைசூர், மங்களூர் போன்ற நகரங்களின் ஆட்சியர்கள் சில யோசனையை தெரிவித்தனர். குடிநீர் கட்டண பில் பாக்கித் தொகை அதிக அளவில் இருப்பதால் கட்டண வசூல் மிகவும் மந்தமாக உள்ளது. எனவே பில் பாக்கி மீதான வட்டியை ரத்து செய்தால் பாக்கித் தொகை எளிதாக வசூலாகிவிடும் என்று தெரிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் குடிநீர் கட்டண பாக்கித் தொகை மீதான வட்டியை ரத்து செய்வது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்றார். அமைச்சர் மேலும் கூறியதாவது: ஏழைகள் வீடு கட்ட வாங்கும் கடன் மீதான வட்டிக்கு சலுகை அளிக்கும் "நம்ம மனே' திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டப்படி ஆண்டு வருமானம் ரூ.30 ஆயிரத்திற்குள் இருக்கும் ஏழைகள் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கும்போது ரூ.1 லட்சம் வரையிலான கடனுக்கு உரிய வட்டியில் 5 சதவிகிதத்தை அரசே செலுத்தும். மீதி 3 சதவிகிதத்தை மட்டும் பலனாளிகள் செலுத்தினால் போதும்.

அதுபோல் ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளோர் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கும் முதல் ஒரு லட்சத்துக்கான வட்டியில் 5 சதவிகிதத்தை அரசே செலுத்தும். இந்தச் சலுகையை பெறத் தகுதியுடையபயனாளிகளிடமிருந்து மனுக்களை ஆட்சியர்கள் பெற வேண்டும். நடப்பு ஆண்டில் 2 லட்சம் பேர் நம்ம மனே திட்டத்தில் பயன்அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதுஎன்றார்.

Last Updated on Friday, 08 January 2010 10:27
 

தனி நபர்களிடம் வரி வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 30.12.2009

தனி நபர்களிடம் வரி வசூலிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டம்

சென்னை : சென்னை மாநகராட்சி, தனி நபர்களிடம் தொழில் வரி வசூலிக்கும் பணியை, ஒப்பந்த அடிப்டையில், தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.மாநகராட்சி வருவாய்த் துறை மூலம், தொழில் வரி மற்றும் கம்பெனி வரி வசூல் நடந்து வருகிறது. இதற்காக, மாநகராட்சியில், 50 உரிம ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்தாண்டு தொழில் வரியாக 85 கோடி ரூபாயும், கம்பெனி வரியாக 47 லட்சம் ரூபாயும் வசூலானது.

நகரில் தொழில் புரிவோர் மற்றும் பணி புரிவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், மாநகரட்சியின் 50 உரிம ஆய்வாளர்கள் மூலம் 155 வார்டுகளிலும் நேரடி களஆய்வு மேற் கொள்ள முடியாத நிலை எற்பட்டுள்ளது.இதனால், சென்னை நகரில் தொழில் புரியும் தனி நபர்களிடம் தொழில் வரி வசூல் செய்யும் பணியை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தனிநபர் வருவாய் ஈட்டும் விவரங்களை கண்டறிதல், தொழில் வரி செலுத்தாத தனி நபர் களுக்கு மாநகராட்சி மூலம் சட்டப்படியான அறிவிப்புகளை பெற்றுத் தருதல், நிலுவை தொகை வசூலித்தல் போன்ற பணிகள், தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.இதில், வசூலாகும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை, சம்பந்தபட்ட தனியார் நிறுவனத்திற்கு கமிஷனாக வழங்கவும் மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு, வரும் 31ம் தேதி நடைபெறும் மன்றக் கூட்டத்தில் அனுமதி பெறப்பட உள்ளது.

Last Updated on Wednesday, 30 December 2009 06:28
 


Page 126 of 148