Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

கோவை மாநகராட்சியில் ரூ.84½ கோடி சொத்து வரி வசூல் ரூ.19 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி                21.03.2013

கோவை மாநகராட்சியில் ரூ.84½ கோடி சொத்து வரி வசூல் ரூ.19 கோடி வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை 

கோவை மாநகராட்சியில் ரூ.84½ கோடி சொத்து வரி வசூல் ஆகி உள்ளது. ரூ.19 கோடியே 25 லட்சம் சொத்து வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 90 சதவீத வரி வசூல் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் குறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:–

 ரூ.84½ கோடி வசூல்

கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு சொத்து வரி வசூல் 87 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 90 சதவீத அளவுக்கு சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வரி வசூலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் சொத்து வரியாக ரூ.103 கோடியே 66 லட்சம் வசூல் ஆக வேண்டும். நேற்றுவரை ரூ.84 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரம் வசூல் ஆகி உள்ளது. இது 81 சதவீதம் ஆகும். இன்னும் ரூ.19 கோடியே 25 லட்சம் வரி வசூல் ஆக வேண்டியது உள்ளது.

 மண்டல வாரியாக

மண்டல வாரியாக வரி வசூல் விவரம் வருமாறு:–

கிழக்கு மண்டலம்– ரூ.16 கோடியே 19 லட்சம் சொத்து வரி வசூலாகி உள்ளது. வரி வசூல் விகிதம் 77 சதவீதம் ஆகும். மேற்கு மண்டலம்– ரூ.16 கோடியே 58 லட்சம். வரி வசூல் விகிதம் 87 சதவீதம் ஆகும். தெற்கு மண்டலம்– ரூ.8 கோடியே 49 லட்சம். வரி வசூல் விகிதம்–73 சதவீதம். வடக்கு மண்டலம்– ரூ.15 கோடியே 4 லட்சம். வரி வசூல் விகிதம்–82 சதவீதம். மத்திய மண்டலம்– ரூ.28 கோடியே 8 லட்சம். வரி வசூல் விகிதம்–84 சதவீதம் ஆகும்.

மார்ச் 31–ந்தேதிவரை வரி செலுத்துவதற்கான காலநிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.

 

குடியிருப்புக்கான வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை!

Print PDF

தினமலர்            21.03.2013

குடியிருப்புக்கான வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை! 

குன்னூர் : குன்னூர் நகராட்சிக்கு வரி பாக்கிசெலுத்த வழங்கப்பட்ட சலுகை காலம் முடிவடைந்துள்ளதால், வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

வீடுகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வணிக நிறுவனங்களுக்கு தொழில் வரி, நகராட்சி கடைகளுக்கு கடை உரிம புதுப்பிப்பு கட்டணம், கடை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது; ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக்குள் வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன.

நகராட்சிக்கு உரிய வரியினங்களை செலுத்துவதில் நகரவாசிகள், மார்க்கெட் கடை வியாபாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

"இந்தாண்டுக்குரிய வரியினங்களை கடந்த 15ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்' என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

"உரிய வரியினங்களை உரிய காலத்துக்குள் செலுத்தி விட வேண்டும்; தவறினால், ஜப்தி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என வாகனம் மூலம் பிரசாரமும் செய்யப்பட்டது.

வசூலில் அதிரடி

நகராட்சி கமிஷனர் உத்தரவில், நகராட்சி வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் வருவாய் துறையினர், வரி வசூலில் ஈடுபட்டனர்.

"நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகளில் இருந்து வாடகை, கடை உரிமப் புதுப்பிப்பு கட்டணம்' என இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; சுமார் 4 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.

சொத்து வரியாக, இதுவரை 2 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; 17 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.

தண்ணீர் கட்டணமாக இதுவரை 90 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை தண்ணீர் வரி செலுத்தாத 30 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் 4 வார்டுகளில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கெடு முடிந்தது

குன்னூரில் அடிப்படை தேவைகள் அதிகமாக உள்ள நிலையில், வசூலிக்கப்படும் வரி இனங்கள் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உதவும், என்ற சூழலில் வரியினங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த நகராட்சி வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளர்.

நகராட்சி வருவாய் அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ""நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தண்ணீர், தொழில் வரி உட்பட வரியினங்களை நாளைக்குள் சம்மந்தப்பட்டவர்கள் செலுத்தி விட வேண்டும்.

வரி செலுத்த தவறுவோரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்; ஜப்தி செய்ய சொத்து இல்லாதவர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்படும்; தவிர, வரி செலுத்தாக வீடு, நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீர் இணைப்பு துண்டிக்கப்படும்; வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கப்படும்,'' என்றார்.

கூடலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி செலுத்ததாவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க, கூடலூர் நகராட்சி ஆணையாளர் மணி உத்தரவிட்டார். நேற்று பழைய கோர்ட் சாலையில் குடிநீர் கட்டணம், சொத்துவரி செலுத்ததாவர்களின் குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். இது குறித்து நகாட்சி அதிகாரிகள் கூறுகையில், "கூடலூர் நகராட்சிக்கு வரவேண்டிய குடிநீர் கட்டணம் 7 லட்சம் ரூபாயும், சொத்து வரி 16 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. நிலுவை தொகை செலுத்தவார்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.
 

சொத்து வரி செலுத்தாத 10 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி கமிஷனர் அதிரடி

Print PDF
தினகரன்        18.03.2013

சொத்து வரி செலுத்தாத 10 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி கமிஷனர் அதிரடி


கோவை,: கோவை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டித்து மாநகராட்சி கமிஷனர் லதா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

கோவை  மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி முதலிய அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேப்பு தொகைகளையும் பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். 2012-13 ம் இரண்டாம் அரையாண்டு 31-3-13ல் முடிவடைகிறது. வரும் 17,24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். வரி வசூல் பணியினை தீவிரப்படுத்தும் பொருட்டு நிலுவை வைத்துள்ள கட்டட உரிமைதாரர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
வடக்கு மண்டலம் பகுதியில் மட்டும் இதுவரை  10 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதை போன்று அனைத்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே  மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை  வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாக உரிமைதாரர்கள் உடனடியாக நிலுவை தொகைகளை செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், குடிநீர் மற்றும்  பாதாள  சாக்கடை இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறும் மாநகராட்சி ஆணையர் லதா தெரிவித்துள்ளார்.
 


Page 22 of 148