Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்களுக்கு மாநகராட்சியின் திடக்கழிவு சேவைக் கட்டணம் உயர்வு

Print PDF

தினமணி      02.03.2013

உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்களுக்கு  மாநகராட்சியின் திடக்கழிவு சேவைக் கட்டணம் உயர்வு

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் திடக்கழிவு சேவைக் கட்டணம் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
 அண்மையில் மாநகராட்சி மாமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு நாளொன்றுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சில கட்டண விவரம்:

 நட்சத்திர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதி, உணவு விடுதி, மதுபானம் அருந்தும் வசதியுடன் கூடிய ஹோட்டல்களுக்கு ரூ. 60. குளிர்சாதன வசதி இல்லாத தங்கும் வசதி மட்டும் கொண்ட தங்கும் விடுதிகளுக்கு ரூ. 12. டாஸ்மாக் மதுபானக் கடைகளிலுள்ள பார்களுக்கு ரூ. 30. இரவு நேர டிபன் மற்றும் டீ கடைகளுக்கு ரூ. 6.

 500 சதுரஅடிக்கு மேல் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு ரூ. 24, குறைவாக உள்ள இறைச்சிக் கடைகளுக்கு ரூ. 12.

 100 படுக்கைகளுக்கு மேல் இருக்கும் மருத்துவமனைகளுக்கு ரூ. 60; 51 முதல் 75 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளுக்கு ரூ. 30; 10 படுக்கைகளைக் கொண்ட கிளினிக்குகளுக்கு ரூ. 6. மொத்த வியாபாரம் செய்யும் காய்கறி, மளிகை மண்டி, பழக்கடைகளுக்கு ரூ. 45; பழமுதிர் நிலையங்களுக்கு ரூ. 36; சிறிய பழக்கடைகளுக்கு ரூ. 18.

 100 கடைகளுக்கு மேல் உள்ள வணிக வளாகங்களுக்கு ரூ. 60; 50 கடைகள் வரையுள்ள வணிக வளாகங்களுக்கு ரூ. 45; 10 முதல் 25 கடைகள் வரையுள்ள வணிக வளாகங்களுக்கு ரூ. 15.

 2500 சதுரஅடிக்கு மேல் உள்ள அச்சகங்கள், பிளக்ஸ் நிறுவனங்களுக்கு ரூ. 30; 1000 சதுரஅடிக்கு குறைவான நிறுவனங்களுக்கு ரூ. 6.

 5000 சதுரஅடிக்கு மேல் உள்ள ஜவுளிக் கடைகள், பிளைவுட் மற்றும் டைல்ஸ், மொசைக் நிறுவனங்களுக்கு ரூ. 60; 1000 சதுரஅடிகளுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு ரூ. 24.

 2000 பேர் அமரும் வகையிலான திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளுக்கு (நிகழ்ச்சி ஒன்றுக்கு) ரூ. 510. அதற்குக் குறைவானோர் அமரும் வகையிலான அரங்குகளுக்கு ரூ. 450. ஆயிரம் நபர்களுக்கும் குறைவானோர் அமரும் வகையிலான அரங்குகளுக்கு ரூ. 300.

 இதேபோல, ஆட்டோ மொபைல் தொழிற்கூடங்கள், தையற்கூடங்கள், முடிதிருத்துமிடம் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் சேவைக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கெனவே இருந்த கட்டணத்தைவிட பொருளில் வைக்கப்பட்ட கட்டணம் 100 மடங்கு அதிகமாக இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.

 தொடர்ச்சியாக நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, முன்மொழிவாக வைக்கப்பட்ட கட்டணத்தை குறைத்து 60 சதவிகிதமாக மாற்றியமைக்க அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட கட்டணமே இது.

Last Updated on Saturday, 02 March 2013 10:53
 

திண்டிவனம் நகராட்சியில் நடமாடும் வரி வசூல் மையம்

Print PDF
தினமணி                        02.03.2013

திண்டிவனம் நகராட்சியில் நடமாடும் வரி வசூல் மையம்

திண்டிவனம் நகராட்சி சார்பில் மக்களிடம் வரி வசூல் செய்ய புதிதாக நடமாடும் வசூல் மைய வாகனம் இயக்கப்பட உள்ளதாக நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தெரிவித்தார்.

 திண்டிவனம் நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஆணையர் அண்ணாதுரை, மேலாளர் கிருஷ்ணராஜ் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நகர்மன்றத் தலைவர் பேசுகையில், நகர மக்களின் நலன் கருதி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடமாடும் வசூல் மைய வாகனம் இயக்கப்பட உள்ளது. அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் நகராட்சிக்கான பல்வேறு வரிகளைச் செலுத்தலாம். தமிழக முதல்வர் அறிவித்தவாறு புதிய பஸ் நிலையப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றார்.

 கூட்டத்தில், ஜெயபுரம் 21-வது வார்டில் புதிய கழிவு நீர் வடிகால் அமைக்க ரூ.2.55 லட்சம், சலவாதி சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்குக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.8.75 லட்சம்,

நகராட்சி வணிக வளாகம் உள்ள செஞ்சி ரோடு பகுதியில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க ரூ.8 லட்சம், 22-வது வார்டில் புதிதாக சிறுபாலம் அமைக்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்பட மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Last Updated on Saturday, 02 March 2013 10:43
 

பழனி கோவில் வரிபாக்கி ரூ. 2.50 கோடி

Print PDF
தினமணி           01.03.2013

பழனி கோவில் வரிபாக்கி ரூ. 2.50 கோடி


பழனி திருக்கோயில் இரண்டரை கோடி ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளதாக, நகர்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பழனி நகர்மன்றக் கூட்டம், நகராட்சி பழனியாண்டவர் ஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். இதில், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், ஆணையர் பாலகிருஷ்ணன், நகரமைப்பு அலுவலர், கவுன்சிலர்கள், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் ஏற்பட்டு இடையூறுகளைத் தெரிவித்தனர். அப்போது, இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனக் கூறிய தலைவர், இதனால் தனக்கே தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார். கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாவண்ணம், நீர்த்தேக்கங்களை தூர்வாரவும், பழனி-புதுதாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பழனி பேருந்து நிலையம் மற்றும் தியேட்டர்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, பழனி திருக்கோவில் வரிபாக்கி குறித்து கேட்கப்பட்டபோது, ரூ. 2.50 கோடி வரிபாக்கி செலுத்தவேண்டும் என ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பின்னர், பழனி-திருச்செந்தூர், பழனி-சென்னைக்கு ரயில் விடப்பட்டதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்களும், காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தமைக்கு, தமிழக முதல்வருக்கு துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையில் அ.தி.மு.க.வினரும், காவிரி நடுவர் நீதிமன்றத்தை பிரதமர் வி.பி.சிங் காலத்தில் நிறுவிய திமுக தலைவர் கருணாநிதிக்கு தலைவர் வேலுமணி தலைமையில் திமுக கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அதேவேளை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேறினர்.
Last Updated on Friday, 01 March 2013 09:36
 


Page 27 of 148