Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சி சாலைகளை மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு அனுமதி

Print PDF

தினமணி    30.05.2010

கரூர் நகராட்சி சாலைகளை மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு அனுமதி

கரூர், மே 28: கரூர் நகராட்சி சாலைகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கரூர் நகராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான ஆய்வுப் பணியில் சேலத்தைச் சேர்ந்த முகேஷ் அசோசியேட் என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டது. கரூர் நகராட்சியின் தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து நெருக்கடி போன்றவற்றை கணக்கிட்டு எந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை இந்நிறுவனம் வகுத்துள்ளது.

இத்திட்டத்துக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கரூர் நகராட்சி 5.96 சதுர கி.மீ சுற்றளவுக் கொண்டது. 76,336 மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு சதுர கி. மீட்டருக்கு சராசரியாக 12, 808 பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி சாலை 75.05 கி.மீ தொலைவும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 10.25 கி.மீ தொலைவும் உள்ளன.

இதில் நகராட்சி வசமுள்ள சாலையில் 54 கி.மீ தொலைவு தார்ச் சாலையாகவும், 15.22 கி.மீ தொலைவு கான்கிரீட் சாலையாகவும், 10 கி.மீ தொலைவு கப்பி சாலையாகவும் உள்ளன என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, புதிய திட்டத்தின்படி சாலைகள் அமைப்பது, பூங்கா, தெருக்களின் தரத்தை மேம்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மேம்பாலம் கட்டுவது, சுரங்கப்பாதை அமைப்பது, புதிய பேருந்து நிலையம் அமைப்பதன் அவசியம், மினி பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களை வேறு பகுதிக்கு மாற்றுவது, சந்தைகளை மாற்றி அமைப்பது, கூடுதல் சந்தைகள் அமைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை செய்து முடிக்கத் தேவையான நிதியில் 50 சதம் அரசும், மீதமுள்ள நிதி 10 வருடத்தில் திரும்ப செலுத்த வேண்டிய கடனாகவும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதுள்ள அவசரத் தேவையாக கரூர் நகராட்சியிலுள்ள 36 வார்டுகளின் சாலைகளைத் தரம் உயர்த்த வேண்டும். அதன் பின்னர், அடுத்தக் கட்டப்பணிகளை மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பூங்கா அமைப்பது என்றும் இப்பணிகளுக்கான திட்ட மதிப்பினை தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், நகராட்சி துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் எஸ். உமாபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் என். மணிராஜ், . முத்துசாமி, இரா. பிரபு, ராஜலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.