Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைப் பணிகளை 20-க்குள் முடிக்க வேண்டும்

Print PDF

தினமணி 10.06.2010

சாலைப் பணிகளை 20-க்குள் முடிக்க வேண்டும்

கோவை, ஜூன் 9: செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தையும் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார்.

செம்மொழி மாநாட்டையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் கோவையில் ரூ.300 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தனி அலுவலர் க.அலாவுதீன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி, கொடிசியா அரங்கிற்குச் செல்லும் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையிலான சாலைகளின் ம்பாடு குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதனுடன் ஆலோசித்தார். மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து ஏற்பாடு, தங்குமிட வசதி, சுகாதார வசதி குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கோவை நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டார். குடியரசுத் தலைவர் மற்றும் மிக முக்கிய விருந்தினர்கள் தங்க உள்ள சுற்றுலா மாளிகை ரூ.1.93 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப் பணிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின், விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவிநாசி சாலையில் அண்ணா சிலை சந்திப்பு, பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை சந்திப்பு, சின்னசாமி சாலை, எஸ்.என்.ஆர். கல்லூரி திட்டச் சாலை, கணபதி - விளாங்குறிச்சி சாலை, விளாங்குறிச்சி - சத்தி சாலைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி சார்பில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் 218 இடங்களில் பஸ் நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. கணபதி சிஎம்எஸ் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் அமர்ந்து பார்வையிட்ட ஸ்டாலின், வெயில்-மழை பயணிகள் மீது விழாத வகையில் மேற்கூரையை நீட்டிக்க அறிவுறுத்தினார். தற்போது பஸ் நிறுத்தத்தில் செம்மொழி மாநாட்டின் லோகோ வைக்கப்பட்டுள்ள பலகையில், மாநாடு முடிந்த பிறகு அரசின் திட்டங்களை விளக்கும் விளக்கப் படங்களை வைக்க அறிவுறுத்தினார்.

சாயிபாபா காலனியில் கே.ஜி. லேஅவுட் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்ட துணை முதல்வர், அங்கு வந்த பெண்களிடம் பூங்காவை சிறப்பாகப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அங்கிருந்து வடகோவை, அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக பேரூர் வரை சென்று சாலை வசதியை பார்வையிட்டார். செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் சாலைப் பணிகள் அனைத்தையும் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், மேயர் ஆர்.வெங்கடாசலம், தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தனி அலுவலர் க.அலாவுதீன், நெடுஞ்சாலைத் துறைச் செயலர் கோ.சந்தானம், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு ஆகியோர் ஆய்வின்போது உடன் சென்றனர்.