Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி கோட்டத்தில் புதிய சாலைகள் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 15.06.2010

கோபி கோட்டத்தில் புதிய சாலைகள் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

கோபி, ஜூன் 15: கோபி கோட்டத்தில் ரூ.2.5 கோடி செலவில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோபி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் வயல்கள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் அடிக்கடி சாலைகள் பழுதடைந்து வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது வெட்மிக்ஸ் என்ற முறையில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோபியில் இருந்து அத்தாணி வரையுள்ள 12 கி.மீ. தார்சாலை, கோபியில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவில் வெட்மிக்ஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோபி சத்தி சாலையில் கோவை பிரிவில் இருந்து அளுக்குளி வரை சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்க 1 கோடி ரூபாயும், குருமந்தூர்மேட்டில் இருந்து மாக்கினாம்கோம்பை வரை உள்ள 2 கி.மீ. பழுதடைந்த சாலையை 1 கோடி ரூபாயும், நம்பியூரில் இருந்து புளியம்பட்டிக்கு புதிய தார்சாலை அமைக்க ரூ.50 லட்சமும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை அகற்றிக்கொள்ள தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த வாரம் ஜமாபந்தி நடைபெற்றதை தொடர்ந்து அவர்களுக்கு ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த காலஅவகாசம் முடிவுற்ற நிலையில் வருவாய்த்துறை மூலம் உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஓரிரு நாளில் துவங்கும் எனவும், அதைத் தொடர்ந்து சாலைஅமைக்கும் பணி நடைபெறும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.