Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: மேயர் பேச்சு

Print PDF

தினமலர் 18.06.2010

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: மேயர் பேச்சு

சென்னை:""நகரில் உள்ள உட்புற சாலைகள் 120 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப் படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.தார் சாலை உயர்வதை தடுக்கும் வகையில், அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கும் பணியை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் மேயர் சுப்ரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:நகரில் தொடர்ந்து சாலைகள் போடுவதால் சாலைகள் உயர்வதை தடுக்கும் வகையில், புதிய நடை முறையில் சாலையை அகழ்ந்தெடுத்து "கோல்டு மில்லிங்' என்ற இயந்திரம் மூலம் தார் சாலை அமைக்கப்படும்.

ஏற்கனவே "கோல்டு மில்லிங்' இயந்திரம் மூலம் சாலையை அகழ்ந்தெடுத்த போது, சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தது.புதிய "கோல்டு மில்லிங்' இயந்திரம் மூலம், ஒரே நேரத்தில் 1.30 மீட்டர் அகலத்திற்கு சமமாக சாலையை அகழ்ந்தெடுத்து தார் சாலை போட முடியும். இந்த இயந்திரம் மூலம், ஒரு நாளைக்கு 2,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு சாலை அகழ்ந்தெடுத்து தார் சாலை போட முடியும்.

நகரில் உள்ள 543 கி.மீ., நீளமுள்ள 2,093 உட்புற சாலைகள் 101 கோடியே 81 லட்ச ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதில் 435 உட்புற சாலைகள் நான்கு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கப்படும். 125 பேருந்து சாலைகள் 37.24 கிலோ மீட்டர் நீளத்திற்கு 17 கோடியே 45 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, பணிகள் நிலைக்குழு தலைவர் சுரேஷ் குமார், கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.